அயோத்தி ராமரை போற்றி அமெரிக்க வானில் பறந்த ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர் பறக்க விடப்பட்டது.
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் ஜனவரி 22 -ம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.
தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர்
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர் பறக்க விடப்பட்டது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நேற்று விமானம் மூலம் ‘பிரபஞ்சம் சொல்கிறது ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனர் வானத்தில் பறக்க விடப்பட்டது.
இந்த நிகழ்வை காண அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர்.
இதுகுறித்து வான்வழி நிகழ்ச்சியின் அமைப்பாளரான உமாங் மேத்தா கூறுகையில், “500 ஆண்டுகால தியாகத்திற்கு பிறகு அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. ஸ்ரீராமரைப் போற்றும் வகையில் வான்வழி பேனர் பறக்கவிடப்படுவது வரலாற்றில் முதல் முறை” என்று கூறினார்.