சாலை விபத்து குறித்த ஷாக் தகவல்கள்.. ஒரு நாளைக்கு இத்தனை பேர் இறக்கிறார்களா? அதிர்ச்சி புள்ளி விவரம்!

உலக சுகாதார அமைப்பின் சாலைப் பாதுகாப்பு குறித்த சமீபத்திய உலகளாவிய நிலை குறித்த அறிக்கையின்படி, உலகளவில் சாலை போக்குவரத்து இறப்புகளின் ஆண்டு எண்ணிக்கை, ஆண்டுக்கு 5% அளவு குறைந்து 1.19 மில்லியனாக (11 லட்சத்து 90 ஆயிரமாக)உள்ளது.

ஆனால் சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக WHO தெரிவித்துள்ளது. உலகளவில் சாலை விபத்துகளினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், நிமிடத்திற்கு இரண்டுக்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் நாளொன்றுக்கு 3,200-க்கும் அதிகமான இறப்புகள் நிகழ்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சாலை விபத்துகளில் மரணமடைவதில் முக்கியமாக 5 முதல் 29 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் இருப்பதாகவும் சுட்டி காட்டுகிறது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், “சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்தபடி போதுமான வேகத்தில் குறையவில்லை. எனவே சாலை விபத்துகளை குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். சாலைகளில் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்லும் பாதசாரிகள் போன்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்புவிடுக்கிறோம் என்றார்.

சமீபத்தில் WHO வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, கடந்த 2010 முதல் உலகளவில் சாலை விபத்து சார்ந்த உயிரிழப்புகள் ஆண்டுக்கு 5 சதவீதம் குறைந்து சுமார் 11 லட்சத்து 90 ஆயிரமாக உள்ளது. ஆனால் இந்தியாவில், கடந்த 2018-ஆம் ஆண்டு சாலை விபத்துகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,50,785 ஆக இருந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1,53,792-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1.3 லட்சமாக இருந்தது.

இதனிடையே சாலை பாதுகாப்பு குறித்த இந்த உலகளாவிய அறிக்கை 2023-ஆனது, உலகளாவிய அளவில் சாலைப் போக்குவரத்து இறப்புகளின் அளவு மற்றும் இறப்பு எண்ணிக்கையை குறைப்பதற்கான சட்டங்கள், உத்திகள் மற்றும் நடவடிக்கைகளை முன்வைப்பதில் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. UN உறுப்பு நாடுகளில் சுமார் 108 நாடுகளில் 2010 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் சாலை போக்குவரத்து தொடர்பான இறப்புகள் குறைந்துள்ளன. பெலாரஸ், ​​புருனே தருஸ்ஸலாம், டென்மார்க், ஜப்பான், லிதுவேனியா, நார்வே, ரஷ்ய கூட்டமைப்பு, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட 10 நாடுகள் சாலை போக்குவரத்து இறப்புகளை 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரம் சாலை விபத்துகளை 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைத்து 35 நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

உலக சாலை போக்குவரத்து இறப்புகளில் சுமார் 28 சதவீதம் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திலும், 25 சதவீதம் மேற்கு பசிபிக் பிராந்தியத்திலும், 19 சதவீதம் ஆப்பிரிக்க பிராந்தியத்திலும், 12 சதவீதம் அமெரிக்க பிராந்தியத்திலும். கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் 11 சதவீதம் மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் 5 சதவீதம் நிகழ்ந்ததாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதே போல பத்தில், ஒன்பது இறப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்துள்ளன, மேலும் இந்த நாடுகளில் உள்ள இறப்புகள் வாகனங்கள் மற்றும் சாலைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது விகிதாசாரத்தில் அதிகமாக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2010 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் பாதசாரி இறப்பு 3 சதவீதம் அதிகரித்து 2,74,000 ஆக உள்ளது. இது உலகளவிலான சாலை விபத்து இறப்புகளில் இது 23 சதவீதமாகும். சைக்கிள் ஓட்டுபவர்களின் இறப்புகள் கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்து 71,000 ஆக உயர்ந்துள்ளது, இது உலகளாவிய இறப்புகளில் 6 சதவீதமாகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *