கோவையில் ரூ.670 கோடியில் ரெடியாகும் சூப்பர் விஷயம்.. 500 ஏக்கர் நிலத்தில் அமையும் பிரம்மாண்டம்
கோவை: கோவை அருகே அரசூர்-பொள்ளாச்சி சாலையில் 500 ஏக்கர் நிலத்தில் ரூ.670 கோடியில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் மையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக கோவை உள்ளது. கோவை மற்றும் புறநகர் பகுதிகள் முழுமையாக தொழில் நிறுவனங்களே உள்ளன. கோவையில் சத்தி ரோட்டில் அன்னூர் வரையிலும், அவினாசி சாலையில் திருப்பூர் வரையிலும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்ஏராளமான உள்ளன. இதேபோல் பாலாக்காடு சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன.
மேலும் திருச்சி சாலையை பொறுத்தவரை பல்லடம் வரையிலும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. மேட்டுப்பாளையம் சாலையிலும் ஏராளமான பைப் மற்றும் பம்பு செட், மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. கோவை முழுமையாக தொழில் நகரமாக மாறிவிட்ட நிலையில், இன்னும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் வர விரும்புகின்றன.
அண்மையில் சென்னையில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் கோவை பகுதிகளில் தொழில்கள் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டன. குறிப்பாக இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்ட்டது. இந்த ஒப்பந்தப்படி கோவை அருகே உள்ள அரசூரில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி கிளஸ்டர் (மையம்) 500 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.
கோவையில் ஏற்கனவே சூலூர் பகுதியில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார்கள் சீனாவில் இருந்து மட்டுமே இன்று வரை இறக்குமதி செய்யப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் இன்னும் 10 வருடத்தில் சாலைகளில் அதிகம் ஓடப்போவது எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்பதால். அதன் தேவை வரலாறு காணாத அளவிற்கு அதிகரிக்க போகிறது. மின்சார வாகன தொழிற்சாலைகள் எல்லாமே தமிழ்நாட்டில் அமையவே விரும்புகின்றன. இந்தியாவின் ஆட்டோ மொபைல் தேவையை தமிழ்நாடு அதிகம் பூர்த்தி செய்து வரும் நிலையில், மின்சார வாகனங்கள் தேவையையும் இனி தமிழ்நாடு தான் பூர்த்தி செய்ய போகிறது. அதை முதலீட்டாளர் மாநாட்டில் நடந்த ஒப்பந்தங்கள் உறுதி செய்துள்ளன.