கேப்டன் ரோஹித் சர்மா இடத்துக்கே ஆப்பு.. இந்திய அணியில் இளம் வீரருக்கு பெருகும் ஆதரவு
இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக, சுப்மன் கில்லை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
சுப்மன் கில் துவக்க வீரராக இருந்தாலும் டெஸ்ட் அணியில் அவரை ஆட வைத்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் அவரை மூன்றாம் வரிசையில் களமிறக்கி ஆட வைத்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.
ஆனால், மூன்றாம் வரிசையில் இறங்கும் சுப்மன் கில் இதுவரை சரியாக ரன்கள் குவிக்கவில்லை. சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மற்றும் தற்போது நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி என எதிலும் அவரால் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், அவரை அணியை விட்டே நீக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், சுப்மன் கில்லை அணி நிர்வாகம் அத்தனை எளிதில் நீக்கி விடாது என்றும் கூறப்படுகிறது. அப்படி என்றால் அவரை எப்படி ரன் குவிக்கும் பேட்ஸ்மேனாக மாற்றுவது? அதற்குத் தான் ரோஹித் சர்மா தன் துவக்க வீரர் என்ற இடத்தை தியாகம் செய்ய வேண்டும் என முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினருமான சரண்தீப் சிங் கூறி இருக்கிறார்.
அதாவது துவக்க வீரர் ரோஹித் சர்மா இனி மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும். சுப்மன் கில் துவக்க வீரராக ஆடுவார் என அவர் கூறி உள்ளார். சுப்மன் கில் இதுவரை துவக்கம் அளித்தே பழகி விட்டார். ஒருநாள் அணியிலும் தன்னை சிறந்த துவக்க வீரராக நிரூபித்து இருக்கிறார். ஆனால், டெஸ்ட் அணியில் மட்டுமே அவர் தடுமாறுகிறார்.