ரூ.63 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் கார்… ஓனர் கண்முன்னே எரிந்து சாம்பலான சம்பவம்- கார் நிறுவனம் என்ன கூறுது?
வால்வோ (Volvo) நிறுவனம் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான அதன் எலக்ட்ரிக் கார் தீப்பிடிப்பு சம்பவத்திற்கு தனது கருத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையையும், இந்த அறிக்கைக்கு காரணமான வால்வோ எலக்ட்ரிக் கார் தீப்பிடிப்பு சம்பவத்தை பற்றியும் இனி பார்க்கலாம்.
எலக்ட்ரிக் கார்கள் தான் நம் எதிர்காலம் என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டாலும், எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் இன்னும் நாம் போக வேண்டிய தொலைவு கொஞ்சம் தூரம் இருப்பது போல் தெரிகிறது. எலக்ட்ரிக் கார்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் பெரும்பாலான பகுதிகளில் இல்லை என்பது ஒருபக்கம் குறையாக இருக்கிறது என்றால், மறுப்பக்கம் அவ்வப்போது நிகழும் தீப்பிடிப்பு சம்பவங்கள்.
பொதுவாகவே, பெரும்பாலான எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் லித்தியம்-இரும்பு பேட்டரிகள் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு மேல் நீண்ட நேரத்திற்கு இருந்தால், நெருப்பை உண்டாக்கக்கூடியவை. இந்த பிரச்சனை கடந்த சில வருடங்களில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, எலக்ட்ரிக் கார்கள் தீப்பிடிப்பு சம்பவங்களை அடிக்கடி பார்க்க முடியவில்லை என்றாலும், அவ்வப்போது ஏற்கப்படுகின்றன.
இந்த வரிசையில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி, சனிக்கிழமை சட்டீஸ்கரில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த வால்வோ சி40 ரீசார்ஜ் என்கிற எலக்ட்ரிக் கார் திடீரென தீப்பிடித்தது. இதனை அறிந்த டிரைவர் உடனடியாக காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி, வெளியேறினார். அந்த சமயத்தில் காரினுள் வேறு சில பயணிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
காரை விட்டு பாதுகாப்பான தூரத்திற்கு சென்றபின், தனது கார் தன் கண் முன் எரிந்துக் கொண்டிருப்பதை காரின் உரிமையாளர் தனது மொபைல்போனில் வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டார். உடனடியாக இணையத்தில் வைரலாகிய இந்த வீடியோ வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் காது வரையில் சென்றுள்ளது.
இதனையடுத்து, வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்த சம்பவத்திற்கு தனது கருத்தை அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளது. வால்வோவின் இதுகுறித்த அறிக்கையில், “கடந்த சனிக்கிழமை அன்று, சி40 ரீசார்ஜ் வாகனம் பயணத்தின்போது தீப்பற்றிய சம்பவம் எங்களுக்கு தெரியும். காருடன் உட்பொதிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரை விட்டு இறங்கும்படி டிரைவரிடம் தெரிவித்தன.
காயங்கள் எதுவும் இல்லை மற்றும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்ட எங்களது வாடிக்கையாளர் தொடர்பு அழைப்பு மையம் தொடர்ந்து ஆன்லைனில் உள்ளது. எங்கள் நிறுவனத்தில், நாங்கள் எங்கள் கார்களின் பாதுகாப்பை பற்றி பெருமிதம் கொள்கிறோம்.
மேலும் இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த சம்பவத்திற்கான காரணத்தை அறிய, இந்த கார் எங்கள் தொழிற்நுட்ப வல்லுநர்களால் நுணுக்கமாக ஆய்வு செய்யப்படும். நாங்கள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் மற்றும் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.