விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் சாதனை என்ன? இந்த மண்ணில் கலக்கிய அஸ்வின், கோலி..!
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
2வது டெஸ்ட் போட்டியை நடத்தவுள்ள விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தற்போது இந்திய அணி வெற்றிக்காக களமிறங்க தயாராகி வருகிறது. விசாகப்பட்டினத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டாவது முறையாக டெஸ்ட் வடிவத்தில் சந்திக்கின்றன.
டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்திய அணி 31 முறையும், இங்கிலாந்து 51 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 50 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இரு அணிகளும் இந்திய மண்ணில் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 22 போட்டிகளிலும், இங்கிலாந்து 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
விசாகப்பட்டினத்தில் இதுவரை இந்தியா:
விசாகப்பட்டினத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இதுவரை அபார சாதனை படைத்துள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி:
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதுவே, இங்கு நடைபெற்ற முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களும் எடுத்த விராட் கோலியே இந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.