உடம்புல இந்த அறிகுறிலாம் தெரியுதா? அப்ப உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Warning Symptoms of Vitamin D Deficiency In Tamil: உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பல்வேறு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை இன்றியமையாதவை.
இதில் வைட்டமின் டி சத்தானது உடலில் பல முக்கியமான செயல்பாடுகளை செய்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த வைட்டமின் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய இரண்டு முக்கிய கனிமச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும், தக்க வைக்கவும் உதவுகிறது.
ஆய்வு ஒன்றில், வைட்டமின் டி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக குறைப்பதோடு, தொற்றுநோயைத் தடுக்கவும், அழற்சியைக் குறைக்கவும் உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வைட்டமின் டி எலும்புகளை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இது தவிர உடலின் பல்வேறு செயல்பாட்டிலும் இச்சத்து முக்கிய பங்காற்றுகிறது.
எனவே இந்த வைட்டமின் டி சத்தை உடலில் போதுமான அளவில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பெரும்பாலும் வைட்டமின் டி சத்தை சூரிய ஒளியில் இருந்து தான் பெற முடியும். ஆனால் தற்போது நிறைய பேர் ஏசியில் இருந்தே வேலை செய்வதால், வெயிலில் சுற்றுவதைத் தவிர்க்கிறார்கள்.
இப்படி சூரியக் கதிர்கள் உடலில் படாமல் இருந்தால், அதன் விளைவாக வைட்டமின் டி குறைபாட்டை சந்திக்க நேரிடும். இப்போது உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.
தூக்கமின்மை
உடலில் வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், அது ஒருவரது தூக்க முறையை பாதித்து, உடலில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை அதிகரித்துவிடும். இதன் விளைவாக மிகுதியால் உடல் சோர்வை அடிக்கடி சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் அவதிப்பட்டாலோ, அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்தாலோ, உடலில் வைட்டமின் டி மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
எலும்புகளில் வலி
வைட்டமின் டி சத்து உடலில் மிகவும் குறைவான அளவில் இருந்தால் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை தான் எலும்புகளில் வலி. ஏனெனில் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து உடம்பில் குறைவாக இருக்கும் போது, அது எலும்புகளில் வலி, தசை பலவீனம், எலும்புகளின் அடர்த்தி குறைவது, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக வைட்டமின் டி குறைபாடு இருந்தால், அடிக்கடி தடுக்கி விழக்கூடும் மற்றும் நிறைய காயங்களை சந்திக்க நேரிடும்.