ராமர் கோயில் திறப்பு குறித்த குடியரசுத் தலைவர் கருத்து
புதுடெல்லி:குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது சமீபத்திய உரையில், அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்ட ராமர் கோவில், முத்தலாக் மற்றும் காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது குறித்தும் பேசினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பல நூற்றாண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.
அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது.நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கனவு நிறைவேறியுள்ளது.
அயோத்தியில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட 5 நாட்களில் 13 லட்சம் பேர் பாலராமர் சிலையை தரிசித்தனர்.அதேபோல், ஜம்மு காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினர்.
இப்போது, 370-வது சட்டப்பிரிவும் வரலாறு ஆகிவிட்டது.மேலும், இந்த நாடாளுமன்றம் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை பா.ஜ.க. அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், ராமர் கோயில் திறப்பு குறித்த குடியரசுத் தலைவர் உரை கவனம் பெற்றுள்ளது.