டீயில் உப்பு சேர்த்து குடித்தால் சுவையாக இருக்குமா..? பரிந்துரை செய்கிறார் அமெரிக்க வேதியல் நிபுணர்!
மழைக் காலங்களில், அதுவும் காலை நேரத்தில் ஒரு கப் சூடான டீ குடிக்கும் போது கிடைக்கும் சுகம் எதற்கும் ஈடாகாது. காலை, மாலை, இரவு என எந்நேரமும் டீ அருந்துபவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். பலருக்கும் ஒரு கப் டீ தான் காலை நேர உணவாக இருக்க்கிறது. விருந்தினர்களை வரவேற்கவும் நண்பர்களோடு இருக்கும் போதும், தலைவலி தீர வேண்டுமென்றாலும் நாம் உடனடியாக நாடுவது டீ மட்டுமே. இந்தியாவில் டீக்கடை இல்லாத ஒரு ஊரைக் கூட காண்பிக்க முடியாது. அந்தளவிற்கு இந்தியாவில் பிரபலமாக இருக்கிறது டீ.
நம் நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே மக்களின் வாழ்கைமுறை மற்றும் கலாச்சாரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது டீ. நவீன டீயின் தோற்றுவாய் சீனாவாக இருந்தாலும், இதன் சுவையும் நறுமணமும் உலகின் பல நாடுகளில் டீ கலாச்சாரத்தை வளர்த்தெடுத்துள்ளது. வழக்கமான இஞ்சி, ஏலக்காய் டீ-க்குப் பதிலாக இன்று பல பொருட்களையும் சேர்த்து டீ தயாரிக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த வேதியல் நிபுணரான மைக்கேல் ஃப்ராங்கி சில சுவையான டீ தயாரிக்கும் முறையை நம்மிடையே பகிர்ந்துள்ளார். இவரது பரிந்துரைகள் பெரும்பாலும் டீ தயாரிக்கும் நுட்பத்தின் மீதுதான் கவனம் செலுத்துகிறது.
டீ வடிப்பதற்கு முன்பு முதலில் கப்பை நன்கு சூடுபடுத்திக்கொள்ள வேண்டும் என இவர் கூறுகிறார். அப்போதுதான் டீ சுவையாக இருக்குமாம். கப்பை சூடுபடுத்தும் போது டீயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் கஃபைன் அதிகரிக்கிறது என்றும் இவர் கூறுகிறார். முதலில் டீ கப்பை சுடு தண்ணீரால் நிரப்ப வேண்டுமாம். பின்னர் சில நிமிடங்கள் கழித்து கப்பில் உள்ள தண்ணீரை கொட்டிவிட வேண்டுமாம்.
அதேப்போல் டீயில் பால் எப்போது சேர்க்க வேண்டும் என்றும் பலரும் இவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். டீ எப்போதும் சூடாக மட்டுமே குடிக்க வேண்டும் என்றும் ஸ்பூன் பயன்படுத்தி இதில் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தனது கிளாசிக் பிரிட்டிஷ் கப்பா டீ ரெசிபியை பற்றி கூறுகிறார்.
இதற்குப் பிறகுதான் சர்ச்சையை ஏற்படுத்தும் விஷயத்தை கூறப் போகிறார் டாக்டர் ஃபிராங்கி. நாம் வழக்கமாக டீயில் சர்க்கரை தான் சேர்ப்போம். ஆனால் அவரோ உப்பு சேர்க்க சொல்கிறார். சர்க்கரை சேர்த்தால் தான் டீயின் கசப்புத்தன்மை குறையும் எனப் பலரும் நினைப்பார்கள். ஆனால் உப்பு சேர்த்தால் தான் நன்றாக இருக்கும் என்பதே உண்மை. நீங்கள் வேண்டுமானால் ஒருமுறை உப்பு சேர்த்து டீ குடித்துப் பாருங்கள். அதன்பிறகு அதன் சுவையை ஒரு நாளும் மறக்கமாட்டீர்கள் என சவால்விடுகிறார்.