ஆரைக்கீரையின் மருத்துவப் பண்புகள்!
நன்றி குங்குமம் டாக்டர்
நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வாய்க்கால் ஓரங்களிலும் வளர்ந்து காணப்படும் ஒருவகை களைச்செடியே ஆரைக்கீரை என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் கீரைகள் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது முருங்கை, அகத்தி, அரைக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளி கீரை போன்றவையே. ஆனால், இந்த ஆரை கீரை களைச்செடியாக அனைவராலும் அறியப்பட்டாலும் இது ஒரு சிறந்த மூலிகைக்கீரையாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
ஆரை என்பது நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட கொடிவகையைச் சேர்ந்த தாவரமாகும். இவை செங்குத்தாக வளரும் நீர்வாழ்த்தாவரமாகும். ஆரை கீரைக்கு ஆராக்கீரை, ஆலாக்கீரை, காட்டுப்பள்ளி குரந்தம், நீறாரை, நீர் ஆரைக்கீரை எனப் பல பெயர்கள் உண்டு. மேலும் அதில் காணப்படும் இலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நான்கு இலைகளைக் கொண்டவை ஆரை எனவும் மூன்று இலைகளைக் கொண்டவை புளியாரை எனவும். ஓரிதழ் உடையவை வல்லாரை எனவும் கூறப்படுகிறது. ஆடி முதல் மார்கழி மாதம் வரை வாய்க்கால்களில் அதிகமான அளவில் ஆரைக்கீரை வளர்ந்திருப்பதைக் காணமுடியும்.
ஆரைக்கீரையின் அறிவியல் பெயர்: மார்சீலியா குவட்ரிபோலியா
தாவரக் குடும்பம்: மார்சிலேசியே.
ஆரைக்கீரை தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும், வாய்க்கால் பகுதிகளிலும் காணப்படுகிறது. இவற்றில் சோடியம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆகையால் இக்கீரை உடலுக்கு நல்ல வலிமையைத் தரக்கூடியது. மேலும் பண்ணை வீட்டில் உள்ள நீர்நிலைகளில் நிறைந்து காணப்படுவதினால் பண்ணைக்கீரை எனவும் ஆரைக்கீரை அழைக்கப்படுகின்றது.
ஆரைக்கீரை ஐரோப்பா மற்றும் ஆசியாவைத் தாயகமாக கொண்டது. இக்கீரை இந்தியா, ஐரோப்பா, சைபீரியா, சீனா, ஜப்பான், வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் மிதமான வெப்பமண்டலம் கொண்ட நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.