டிசம்பர் 2023 ஆஃபர்… ஜனவரி விலை உயர்வுக்கு முன் குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு தள்ளுபடி வழங்கிய மாருதி சுசுகி!
ஆண்டு இறுதி நெருங்கி இருக்கும் நிலையில் இந்தியாவில் முன்னணி வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கும் மாருதி சுசுகி, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கார் மாடல்களுக்கு இந்த டிசம்பர்
2023-ல்; ரூ.2.3 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனமானது அதன் வாகனங்களின் விலையை புத்தாண்டு முதல் அதாவது 2024 ஜனவரி முதல் உயர்த்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்து உள்ளது. இந்த நிலையில் வாகன விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் தனது சில குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதி மாதமான டிசம்பரில் தள்ளுபடியை மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனம் தனது ஜிம்னி, ஃப்ரான்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாடல்களில் ரூ.2.3 லட்சம் வரை பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடியானது கேஷ் டிஸ்கவுவுண்ட்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் பெனிஃபிட்ஸ் போன்ற வடிவங்களில் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி ஜிம்னி: (ரூ. 2.3 லட்சம் வரை தள்ளுபடி)
மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஜிம்னி தண்டர் எடிஷனை ரூ.10.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. என்ட்ரி-லெவல் மாருதி சுசுகி ஜிம்னி ஜெட்டா வேரியன்ட்டிற்கு இந்த டிசம்பர் 2023-ல் அதிகபட்ச தள்ளுபடியாக ரூ.2.3 லட்சம் வழங்கப்படுகிறது. அதே நேரம் டிசம்பர் 2023-ல் ஜிம்னியின் Alpha மற்றும் Zet வேரியன்ட்ஸ்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடியை பெறலாம்.
மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ்: (ரூ.40,000 வரை தள்ளுபடி)
மாருதி சுசுகியின் Fronx கார் மாடலுக்கு வேரியன்ட்ஸ்களை பொறுத்து இந்த டிசம்பரில் ரூ.40,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பலேனோவை அடிப்படையாக கொண்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Fronx, இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தவிர அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதிகம் விற்பனையாகும் மாருதி சுசுகி நெக்ஸா கார்களில் ஒன்றாகவும் Fronx இருக்கிறது.
மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா: (ரூ.35,000 வரை தள்ளுபடி)
மாருதி சுசுகி நிறுவனத்தின் Grand Vitara மாடலுக்கு இந்த டிசம்பர் 2023-ல் ரூ.35,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹைப்ரிட் வேரியண்ட் உட்பட கிராண்ட் விட்டாரா வேரியன்ட்ஸ்கள் மீது வாடிக்கையாளர்கள் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை தள்ளுபடியை பெறலாம். கிராண்ட் விட்டாரா எஸ்யூவி-யானது சிக்மா, டெல்டா, ஸீட்டா, ஸீட்டா பிளஸ், ஆல்பா மற்றும் ஆல்பா பிளஸ் உள்ளிட்ட வேரியன்ட்ஸ்களில் கிடைக்கிறது. இதில் பேஸ்-ஸ்பெக் சிக்மா வேரியன்ட் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸை மட்டுமே இந்த மாத தள்ளுபடியாக கொண்டுள்ளது.