இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் : புதிய சலுகைகள் வெளியாக வாய்ப்பு..!
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பொதுவாக, பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார்.
அடுத்த நாள் நிதி மந்திரி பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அந்த வகையில், நேற்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். சம்பிரதாயப்படி இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும். ஆனால், தேர்தல் நடக்க இருப்பதால் அவரால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இந்த நிதி ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் சூழ்நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கான அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்ய முடியும்.
அந்த வகையில், இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் அவர் வரலாறு படைக்கிறார். தொடர்ந்து அவர் தாக்கல் செய்யப்போகும் 6-வது பட்ஜெட் இது. இதுவரை தொடர்ந்து 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தது முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய்தான். அவரது சாதனையை இப்போது நிர்மலா சீதாராமன் சமன் செய்ய உள்ளார்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 2-வது முறையாக பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தபோது, நிதி அமைச்சர் பொறுப்பை நிர்மலா சீதாராமன் ஏற்றுக்கொண்டார். அந்த ஆண்டு ஜூலை மாதம் தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது முதல் ஆண்டுதோறும் பட்ஜெட்டை தாக்கல் செய்து, இந்த ஆண்டு இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒரு சாதனை படைக்க உள்ளார்.