25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்
புதுடெல்லி: அரசு நிர்வாகத்தின் சமூக, பொருளாதார கொள்கைகளால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
தற்போது உலகின் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இது 2024-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது: புதிய நாடாளுமன்றத்தில் இது எனது முதல் உரையாகும். அமிர்த காலத்தின் தொடக்கத்தில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கொள்கைகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன்.
‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை குழந்தை பருவம் முதல் இந்தியா கேட்கிறது. எனினும், பெரிய அளவில் வறுமை ஒழிக்கப்படுவதை தற்போதுதான் நம் வாழ்வில் முதல்முறையாக காண்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். அரசு நிர்வாகத்தின் சமூக, பொருளாதார கொள்கைகளுக்கு இது ஒரு சான்று.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பல நூற்றாண்டுகளின் கனவாக இருந்தது, அது இப்போது நிறைவேறியுள்ளது. நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘தற்சார்பு இந்தியா’ ஆகிய திட்டங்கள் இந்தியாவின் பலமாக மாறியுள்ளன.
பெரிய பொருளாதாரம்: இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. அதன் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் 7.5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
மிகப்பெரிய கடல் பாலமான ‘அடல் சேது’ திறக்கப்பட்டுள்ளது. அதிவேக மெட்ரோ ரயில் சேவையான ‘நமோ பாரத்’ ரயில் சேவை மற்றும் குறைந்த கட்டண ‘அமிர்த பாரத்’ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விமான ஒப்பந்தத்தில் இந்தியாவின் விமான நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
தற்போது உலகின் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. கடந்த மாதம் யுபிஐ மூலம் 1,200 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.