பக்தர்களை தடுத்த தீட்சிதர்கள்.. சிதம்பரம் கோயிலில் பெரும் பரபரப்பு! போலீசிடம் போன அறநிலையத்துறை
பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தீட்சிதர்கள் தடுப்பதாக அறநிலையத்துறை காவல்துறையிடர் புகார் அளித்து உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏற தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்ய தடை இல்லை என்று அறிவித்தது. ஆனாலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தீட்சிதர்கள் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அரசு உத்தரவை மீறிய தீட்சித்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்று முதல் 28 ஆம் தேதி வரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் தீட்சிதர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்றும் வரும் ஆருத்ரா தரிசன விழாவின் உச்ச நிகழ்வாக நாளை தேரோட்டமும், புதன்கிழமை ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.
இந்த கோயிலில் இதற்கு முன் நடைபெற்ற திருமஞ்சன திருவிழாவின் போது பக்தர்கள் கனகசபை மீது ஏற திட்சிதர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அங்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. கனகசபை மீது பக்தர்கள் ஏறக் கூடாது என்று வைக்கப்பட்ட பதாகைகளை இந்து சமய அறநிலையத்துறையினர் அகற்றினர். இந்த நிலையில், மீண்டும் அதுபோன்ற பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, ஏற்கனவே மனு அளித்து இருந்தது.
போலீசார் கோயிலில் பாதுக்காப்பு அளித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டு இருந்தது. மறுபக்கம் தீட்சிதர்களோ கோயிலில் பாரம்பரிய முறைபடி பூஜைகள் நடைபெற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி, கோயிலில் பூஜைகள் நடைபெறும் சமயத்தில் காவல் துறை போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில், இன்று முழுவதும் கனகசபை மீது பக்தர்கள் ஏற தீட்சிதர்கள் அனுமதி வழங்காமல் அதன் கதவை உள்பக்கமாக பூட்டி இருந்தனர்.
இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து, அறநிலையத்துறையின் சிதம்பரம் தில்லை காளி கோயில் செயல் அலுவலர் சரண்யா தீட்சிதர்களிடம் இது பற்றி கேட்டு உள்ளார். இதற்கு தீட்சிதர்கள் நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அறநிலையத்துறை அதிகாரி சரண்யா சிதம்பரம் காவல்நிலையத்தில் தீட்சிதர்கள் மீது புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசணையை மீறி சிதம்பரம் நடராஜர் திருகோயில் கனசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவிடாமல் தடுக்கும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.