ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் MoveOS வழங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அம்சங்கள்!
ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. இதில் இவர்களது இயங்குதளமும் அதாவது சாஃப்ட்வேர் பிளாட்ஃபார்மும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலகட்டம் என்பதால், வாடிக்கையாளர்களும் வாகனங்களின் பல மேம்பட்ட அம்சங்களை எதிர்பார்க்கின்றனர். இதன் தேவையை இதுபோன்ற இயங்குதளங்கள் பூர்த்தி செய்கின்றன.
அந்த வகையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருக்கும் இந்த மூவ் சாஃப்ட்வேர் பிரபலமாகி வருகிறது. தற்போது நிறுவனம் இதற்கான புதிய வெர்ஷனை வெளியிட்டு அப்டேட் வழங்கியுள்ளது. அதன்படி, இதன் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட அம்சங்களை ஓலா வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இந்த புதிய அப்டேட்டை எஸ்1 எக்ஸ் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களைத் தவிர்த்து அனைவரும் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. எனினும், எஸ்1 எக்ஸ் யூஸர்களுக்கு விரைவில் அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள ஓலா நிறுவனம், அதற்கான தேதியை அறிக்கையில் குறிப்பிடவில்லை.
ஓலா மூவ் ஓஎஸ் 4 சிறப்பம்சங்கள் என்ன?
புதிய ஓலா MoveOS 4 பதிப்பில் ‘ஓலா மேப்ஸ்’ எனும் அம்சம் வழங்கபட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் போன்று நேவிகேஷன் அம்சத்தை வழங்கும் இந்த செயலியின் வாயிலாக ஓலா சார்ஜிங் ஸ்டேஷன்கள் எங்கு இருக்கிறது என்பதையும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும். இதில் ஃபைண்ட் மை ஸ்கூட்டர் (Find My Scooter) மற்றும் ஷேர் லொக்கேஷன் ஃபிரம் தி ஆப் (Share Location from the App) ஆகிய இரண்டு வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய MoveOs 4 இயங்குதளத்தில் ஓலா ரைடு ஜர்னல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ரைடர்களின் சராசரி வேகம், பேட்டரி பயன்பாடு, செயல்திறன், ஒவ்வொரு பயணத்திலும் சேமிக்கப்பட்ட பணம், பயணித்த தூரம் போன்றவைகளைக் கண்காணிக்க முடியும். ஓலா தனது மின்சார இருசக்கர வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டுள்ளது. அதன் விளைவாக இந்த புதிய அப்டேட் வாயிலாக திருட்டு எதிர்ப்பு அலாரத்தையும் செயல்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களின் ஸ்கூட்டர்களைத் திருட முயற்சிக்கும் பல்வேறு வழிகளைத் தடுக்க இந்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் பயோமெட்ரிக் லாக் ஆகும்.
இதன் வாயிலாக வாடிக்கையாளரின் முகம் அல்லது கைரேகைகளை ஸ்கேன் செய்வதன் வாயிலாக மட்டுமே இந்த சேவைகளை அணுக முடியும். மேம்படுத்தப்பட்ட அன்லாக், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், இசை மற்றும் அழைப்புகளுக்கான ஹெட்ஃபோன் கட்டுப்பாடு, டேக்-மீ-ஹோம் விளக்குகள் ஆகியன கூடுதல் அம்சங்களாக உள்ளன.
மூவ் ஓஎஸ் பதிவிறக்கம் செய்யும் செயல்முறை
– ‘ஓலா எலெக்ட்ரிக்’ செயலியை ஸ்கூட்டரில் திறக்கவும்
– பின்னர் அதனுடன் உங்கள் வைஃபை அல்லது போனின் ஹாட்ஸ்பாட்டை இணைக்கவும்
– ஆட்டோ டவுன்லோடு என்ற ஆப்ஷனை ஆக்டிவேட் செய்யவும்
– பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், ’இன்ஸ்டால்’ எனும் ஆப்ஷனை கிளிக் செய்து நிறுவ வேண்டும்.