சுவையான ‘பருப்பு உருண்டை குழம்பு’ எப்படி வைக்கனும் தெரியுமா..? இதுதான் ரெசிபி..!
பருப்பு உருண்டை குழம்பு என்பது துவரம் பருப்பு, கடலை பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய குழம்பு செய்முறையாகும்.
பருப்பு உருண்டை குழம்பு மிகவும் சுலபமாக செய்யலாம். மேலும் அதே சமயத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அதன் சுவை இருக்கும். சுவை மிகுந்த ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
உருண்டை செய்ய தேவையானவை :
துவரம் பருப்பு – 3/4 கப்
கடலைப்பருப்பு – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய் – 4
சோம்பு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
குழம்பு செய்ய தேவையானவை :
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
அரைத்த தேங்காய்
புளி – தேவையான அளவு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
வெந்தயம் – அரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் உருண்டை செய்ய கடலை பருப்பு, துவரம் பருப்பை சுமார் 1 மணிநேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
பருப்பு நன்றாக உறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு அதை தேவையான அளவு சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வேகவைத்து அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
அனைத்தும் பொன்னிறமாக மாறியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இந்த குழம்பு நன்றாக கொதித்ததும் வேகவைத்துள்ள பருப்பு உருண்டைகளை போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.
கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கினால் சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி…