இந்த மசாலா அரைத்து ‘நகரை மீன் குழம்பு’ வைத்து சாப்பிட்டால் சுவை அப்படி இருக்கும்.!
குழம்பு மற்றும் வறுவல் என்று இரண்டிற்குமே சுவையான மீன் நவரை தான். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முதல் 41 நாட்கள் வைத்துக்கொடுக்கும் குடிமிளகு மீன் குழம்பில் பாதி நாட்கள் நவரை கொண்டு செய்து தருவார்கள்.
இந்த மீன் குழம்பு தாய்மார்களுக்கும், தாய்ப்பாலின் வழியாக குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பாற்றலை வழங்கக்கூடியதாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க நவரை மீன் குழம்பை மசாலா அரைத்து வித்யாசமான முறையில் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நகரை மீன் – 1/2 கிலோ
மாங்காய் துண்டுகள்
புளிக்கரைசல் – 1/2 கப்
மசாலா அரைக்க தேவையான பொருட்கள் :
எண்ணெய் – 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
தேங்காய் துருவல் – 1/2 கப்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 2
கல் உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 15
வர மிளகாய் – 2
இடித்த பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 2
கடுகு
சீரகம்
வெந்தயம்
கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை :
நகரை மீன் நன்றாக அலசி சுத்தம் செய்து தேவையான அளவில் வெட்டி எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளி சேர்த்து ஊறவைத்து அதை கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், தக்காளி, துருவிய தேங்காய், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, கல் உப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள அனைத்தும் நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு மண் சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முழு வர மிளகாய், இடித்த பூண்டு பல், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதித்தவுடன் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் மாங்காயை சேர்த்துக்கொள்ளுங்கள்.
குழம்பு எண்ணெய் பிரிந்து வரும் பதத்திற்கு வந்தவுடன் கழுவி வைத்துள்ள மீனை சேர்த்து வெந்ததும் குழம்பை இறக்கிவிடவேண்டும்.
அவ்வளவுதான் சுவையான ‘நவரை மீன்’ குழம்பு ரெடி…
இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவை அப்படி இருக்கும்.