பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 30,000 புகலிடக்கோரிக்கையாளர்கள்: முதன்முறையாக வெளியான தகவல்
நீதிமன்ற தீர்ப்பு, தொண்டு நிறுவனங்களின் எதிர்ப்பு என பல்வேறு தடைகளையும் தாண்டி, எப்படியும் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தியே தீருவது என ஒற்றைக்காலில் நிற்கிறது பிரித்தானிய அரசு.
இந்நிலையில், பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 30,000 புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளதாக, உள்துறை அலுவலக மூத்த அலுவலர் ஒருவர் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
நாடுகடத்தப்படும் அபாயத்தில் 30,000 புகலிடக்கோரிக்கையாளர்கள்
33,085பேர், பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளதாகவும், அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என்னும் அதிர்ச்சியளிக்கும் தகவலை, முதன்முறையாக, உள்துறை அலுவலக புலம்பெயர்தல் மற்றும் எல்லைகள் பிரிவின் டைரக்டர் ஜெனரலான Dan Hobbs தெரிவித்துள்ளார். அவர்களை நாடுகடத்த பிரித்தானிய அரசு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது!
மாயமாகும் புகலிடக்கோரிக்கையாளர்கள்
இதற்கிடையில், தங்களுக்கு புகலிடம் கிடைக்கும் வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துகொண்ட புகலிடக்கோரிக்கையாளர்களில் பலர் தலைமறைவாகிவருவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அரசின் திட்டங்கள், எளிதில் ஆபத்துக்குள்ளாகும் அபாயத்திலிருப்போருக்கு பெரும் கவலையையும் துயரத்தையும் கொடுக்கின்றன என்பதுதான் உண்மை என்கிறார், Refugee Council என்னும் அமைப்பின் முதன்மைச் செயல் அலுவலரான Enver Solomon என்பவர்.
நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள் விவகார தேர்வு கமிட்டி முன் தோன்றி, அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லியிடம், எத்தனை புகலிடக்கோரிக்கையாளர்கள் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இத்தனைபேர்தான் என வரையறை எதுவும் முடிவு செய்யப்படவில்லை, ஆனாலும், அந்த எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும் என்று கூறினார்.