பாஜகவுக்கு ஷாக்- ஜாதிவாரி கணக்கெடுப்பில் ‘இந்து’ இல்லை என சொல்லுங்க- ‘லிங்காயத்’ மாநாடு தீர்மானம்!

ஜாதிவாரியாக புதியதாக கணக்கெடுப்பு நடத்தினால் ‘லிங்காயத்துகள்’ தங்களை இந்துக்கள் இல்லை என பதிவு செய்ய வேண்டும் என கர்நாடகாவின் வீரசைவ லிங்காயத்துகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கர்நாடகாவில் லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்கள் ஆகியவை பெரும்பான்மை ஜாதிகள். லிங்காயத்துகள் தற்போது இந்துக்களாக இருந்தாலும் தங்களை வீரசைவ லிங்காயத்துகள் என தனி மதமாகவே அங்கீகரிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

இந்த நிலையில் கர்நாடகாவின் தாவணகெரேவில் வீர சைவ லிங்காயத்துகளின் மகாசபை கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ், பாஜகவை சேர்ந்த லிங்காயத் தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், பிஒய் விஜயேந்திரா, பசவராஜ் பொம்மை, லக்‌ஷ்மி ஹெப்பல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சாமனூர் சிவங்கசரப்பா, லிங்காயத் அமைப்பின் சர்வதேச தலைவர் என்ற முறையில் தலைமை வகித்தார்.

கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காந்தராஜ் கமிட்டி அமைக்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் சித்தராமையாதான் இந்த கமிட்டியை அமைத்தார். ஆனால் இந்த கமிட்டியின் அறிக்கை ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதனால் காந்தராஜ் கமிட்டி அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதி அமைப்புகள் வலியுறுத்துகின்றன. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸிலும் இந்த காந்தராஜ் கமிட்டி அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்கிற குரல்கள் வலுத்துள்ளன. இதனால் புதியதாக அறிவியல் பூர்வமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

அப்படி புதியதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் போது, லிங்காயத்து ஜாதியினர் தங்களை ‘இந்து மதம்’ ‘இந்து’க்கள் என பதிவு செய்யக் கூடாது; வீரசைவ லிங்காயத்துகள் என தனி மதமாகவே பதிவு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது லிங்காயத் மாநாடு. மேலும் வீரசைவ லிங்காயத்துகளின் கீழ் வரும் உட்ஜாதிகளை ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் ‘இந்துக்கள்’ என்ற அடிப்படையில் வாக்கு வங்கிகளை ஒருங்கிணைத்து நிற்கும் பாஜகவுக்கு தென்னிந்தியாவில் அக்கட்சி பலமாக இருக்கக் கூடிய ஒரே மாநிலமான கர்நாடகாவில் நாங்கள் இந்துக்களே இல்லை என்கிற பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான லிங்காயத்துகள் அழுத்தம் திருத்தமாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது அதிர்ச்சியை தரக் கூடியதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *