மஹிந்திரா காரை இதுக்காகவே வாங்கி இருப்பாங்க போல!! பவர் ஃபுல் என்ஜின் இருந்தால் இது எல்லாம் சாத்தியமே!
மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) காரில் இளைஞர்கள் சிலர் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சாலை வழியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த பயணத்திற்கு இடையில், சீன பெருஞ்சுவரை அவர்கள் கடந்துள்ளனர்.
சாலை வழியாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்வதால், இடையில் நிறைய நாடுகளை இவர்கள் கடந்து செல்ல வேண்டும். இந்த வகையில், நமது அண்டை நாடான சீனாவிற்குள் இவர்களது ஸ்கார்பியோ என் கார் நுழைந்துள்ளது. பிரம்மாண்ட சீன பெருஞ்சுவருக்கு அருகே காரை நிறுத்தி, இவர்கள் காட்சிப்படுத்திய வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
சீன பெருஞ்சுவரை இந்தியாவில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கை நோக்கி செல்லும்போது அடையலாம் அல்லது வேறு வழியாக செல்லும்போது அடையலாம். இவர்களுக்கு பீஜிங் செல்ல வேண்டிய தேவை இல்லாததால், வேறு வழியில் அடைந்துள்ளனர். உலகின் பெரும் அதிசயங்களுள் ஒன்றாக இருக்கும் இந்த பெருஞ்சுவர் ஆனது சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
ஆதலால், ஆஸ்திரேலியாவுக்கு எதிர்திசையில், சீன பெருஞ்சுவரை காண்பதற்காகவே பல மணிநேரத்திற்கு இவர்கள் தங்களது ஸ்கார்பியோ என் காரை ஓட்டி சென்றுள்ளனர். சீன பெருஞ்சுவரை அடைந்த முதல் மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் இதுதான் என கூறப்படுகிறது. பெருஞ்சுவரை அடைந்த பின், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இந்த இளைஞர்கள் சுவரின் மீது கொஞ்ச தூரத்திற்கு நடந்தனர்.
கருப்பு நிற ஸ்கார்பியோ என் காரில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ள இவர்கள் இதேபோன்று சில வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு சாலை வழியாக சென்று இருந்தனர். அப்போது இவர்கள் எடுத்துக் கொண்ட வீடியோக்களும், படங்களும் இணையத்தில் கவனத்தை பெற்றதை அடுத்து தற்போது ஆஸ்திரேலிய பயணத்தை துவங்கி உள்ளனர்.
சீனா வழியாக ஆஸ்திரேலிய கண்டத்துக்கு சென்றுக் கொண்டிருக்கும் இந்த இளைஞர்கள் இடையில் நேபாளம், திபெத், லாவோஸ், மியான்மர், வியாட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனிஷியா நாடுகளை தங்களது ஸ்கார்பியோ என் காரில் கடந்து செல்ல உள்ளதாக வீடியோக்களில் தெரிவித்து வருகின்றனர். அதாவது, இந்தோனிஷியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவது இவர்களது திட்டம்.
இந்தோனிஷியாவையும், ஆஸ்திரேலியாவையும் தரை வழியாக இணைக்கும் பாலம் எதுவும் கிடையாது. ஆதலால், இந்தோனிஷியாவில் இருந்து கப்பல் வழியாகவே இவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டியிருக்கும். இந்த ஒட்டுமொத்த பயணத்திற்கு இவர்கள் நிர்ணயித்துக் கொண்டிருக்கும் கால அளவு 110 நாட்களாகும். அதாவது, ஏறக்குறைய 4 மாதங்கள் ஆகும்.