Viduthalai: சர்வதேச விழாவில் 5 நிமிடங்கள் தொடர்ந்து ஒலித்த கரவொலி: ஏகபோகமாக பெயர் வாங்கிய வெற்றிமாறனின் ‘விடுதலை’

Viduthalai Part 1 & 2: ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம்-1 மற்றும் விடுதலை பாகம்-2 படங்களுக்கு 5 நிமிடங்கள் கைத்தட்டல்கள் கிடைத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை பாகம்-1 படம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரைக்கு வந்தது. எல்ரெட் குமார் தயாரித்த விடுதலை பாகம்-1ல் விஜய் சேதுபதி, சூரி, அப்புக்குட்டி, பவானி என பலர் நடித்துள்ளனர். நடுத்தர மக்களின் மீது நடத்தப்பட்ட அதிகார அடக்குமுறையை கூறிய விடுதலை பாகம் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களையும், வசூலிலும் நல்ல வரவேற்பையும் பெற்றது.
மேலும் உள்ளூர் எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி உலக அளவில் விடுதலை பாகம் -1 படத்துக்கு வரவேற்புகள் இருந்தன. விடுதலை பாகம் ஒன்றைத் தொடர்ந்து, விடுதலை பாகம் -2 படப்பிடிப்பில் வெற்றிமாறன் பிசியாக இருந்தார்.
இந்த நிலையில் விடுதலை பாகம்-1 மற்றும் விடுதலை பாகம்-2 படங்கள் சர்வதேச அளவில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முன்னதாகத் திரையிடப்பட்டன. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் விடுதலை பாகம்-1, விடுதலை பாகம்-2 திரையிடப்படும் என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் முன்னதாக அறிவித்திருந்தார்.
விழாவில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ள நிலையில், இவ்விழாவில் வெற்றிமாறன் படைப்பின் முழு கதையை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விடுதலை பாகம் – 1 மற்றும் பாகம் – 2 படங்களுக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு 5 நிமிடங்கள் கைத்தட்டல்கள் கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒரு சிறந்த படைப்பை பாராட்டுவதற்கு தொடர் கைத்தட்டல்கள் வழங்கி அங்கிருக்கும் சினிமா ஆர்வலர்கள் கௌரவிப்பது வழக்கம். இந்நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.