கரூர், கோயம்புத்தூர் மக்கள் செம ஹேப்பி..!! கொங்கு மண்டலத்தில் புதிய 6 வழி சாலை திட்டம்..!
கோயம்புத்தூர் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய மாவட்டமாக இருக்கும் வேளையில், இந்நகரத்தை இணைக்கும் பிற நகரங்களும் அதிகப்படியான வாய்ப்புகளைப் பெற்று வருகிறது.
இதில் முக்கியமாகக் கரூர் மாவட்டம் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெரும் காரணத்தால் கரூர் – கோயம்புத்தூர் மத்தியில் போக்குவரத்து பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே பெரும் பகுதி இருவழிச் சாலையாக இருக்கும் காரணத்தால் வேகமாகப் பயணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இரு மாவட்டங்கள் மத்தியில் பயணிகள் போக்குவரத்து மட்டும் அல்லாமல் டெக்ஸ்டைல் பொருட்கள் சார்ந்த சரக்கு போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வேகமான போக்குவரத்து மிகவும் அவசியமானதாக உள்ளது. அந்த வகையில் கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பசுமை வழிச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆலோசகரை நியமித்துள்ளது.
கரூர் மற்றும் கோயம்புத்தூர் வழித்தடத்தில் வாகனங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாகப் பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, கரூர்-கோயம்புத்தூர் இடையே புதிய சாலை அமைப்பதற்கான திட்டத்தை NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தது. NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். எவ்வாறாயினும், இந்தத் திட்டம் NHAI கூட்டங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையிலான சாலை திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆயத்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், DPR தயாரிக்க ஆலோசகரை NHAI நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பல்வேறு பகுதிகளுக்குப் பலமுறை சென்று டிபிஆர் பணியை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. NHAI மூத்த அதிகாரி கூறுகையில், டிபிஆர் தயாரிக்கும் பணி முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது, ஆலோசகர் ஒரு மாதத்திற்குள் அதை சமர்ப்பிக்கலாம். இதன் பின்னர் இந்த அறிக்கை NHAI தலைமையகத்திற்கு அனுப்பப்படும் என ஹிந்து பத்திரிக்கை தெரிவித்துள்ளது.