எகிறும் இந்தியாவின் கடன் சுமை… IMF கணிப்பை மறுக்கும் இந்திய அரசு..!
2027-க்குள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 100% அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் இந்திய அரசின் கடன் சுமை குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ள நிலையில், நீண்ட கால கடன்கள் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள, தனியார் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், “இந்திய அரசின் கடன், உள்நாட்டு உற்பத்தியை விட 100% அதிகரிக்கும் என்று கூறும் ஐ.எம்.எஃப்-ன் மதிப்பீடு தவறானது. 2020-21ஆம் ஆண்டு சுமார் 88%- ஆக இருந்த பொது அரசாங்கக் கடன், அதுவே 2022-23ஆம் ஆண்டு சுமார் 81%- ஆக குறைந்துள்ளது. பொது அரசாங்கக் கடனில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடனும் அடங்கும். இந்தியாவை பொறுத்தவரை மாநிலங்கள் தனித்தனியாக தங்கள் நிதி பொறுப்புச் சட்டத்தையும் இயற்றியுள்ளன. அவை அந்தந்த மாநில சட்டமன்றங்களால் கண்காணிக்கப்படுகிறது.
மேலும், உலகளாவிய நிதி நெருக்கடி, கோவிட்-19, ரஷ்யா-உக்ரைன் போர், போன்ற அசாதாரண சூழ்நிலைகள் உலகப் பொருளாதாரம் ஒரே மாதிரியாக பாதிப்படைந்துள்ளது. அவற்றில் இந்தியா போன்ற சில நாடுகள் விதிவிலக்காக திகழ்ந்தன. இங்கிலாந்தின் கடன் அளவு அதன் ஜி.டி.பி-யில் 140 சதவிகிதமாகவும், அமெரிக்காவிற்கும் 160 சதவிகிதமாகவும் மற்றும் சீனாவிற்கு 200 சதவிகிதமாகவும் உள்ளது. இவற்றை இந்தியாவின் நிலையோடு ஒப்பிடுகையில் மிக மோசமான நிலை” என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.