பெட்ரோல், டீசல் விலை குறையும்னு பார்த்தா, LPG விலை எகிறியது! பட்ஜெட்டில் கலால் வரி குறையுமா?
இடைக்காலப் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்குமா அல்லது குறைக்கும் அளவுக்கு மத்திய அரசிடம் நிதி ஆதாரம் உள்ளதா என்பது தான் இன்றைய பட்ஜெட்டில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
உண்மையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பது மூலம் இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் தேவைக்கு மத்தியில் நாட்டின் பணவீக்கத்தை எளிதாகக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் கலால் வரியைக் குறைப்பது மூலம் ஏற்படும் விளைவுகளை மத்திய அரசு உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு நிதி ஆதாரம் உள்ளதா என்பது முக்கியக் கேள்வி. காரணம் மத்திய மாநில அரசுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு மூலம் கிடைக்கும் வருமானம் மிகப்பெரியது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தால் அரசின் நிதி ஆதாரம் குறைந்து, பல்வேறு நலத் திட்டங்களுக்கான நிதி ஆதாரம் கிடைக்காமல் போகும். மத்திய அரசு இலவசங்களை எதிர்க்கும் வேளையில் நலத் திட்டங்கள் மூலம் பல சேவைகளை மக்களுக்கு அளித்து வருகிறது. இந்தப் பொதுத்தேர்தலுக்கும் பிஎம் கிஸ்சான், பிஎம் ஆவாஸ் யோஜனா, பெண்கள் நலத் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தித் தான் அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படும் வேளையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பது சாத்தியமா..? 2024ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை அளவீட்டை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதத்தை இலக்காகக் கொண்டுள்ளது. 2026ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறையை 4.5 சதவீதமாகக் குறைக்கும் இலக்குடன் மத்திய அரசு பயணிக்க உள்ளது.
இந்த மாபெரும் இலக்கை அடைய அதிகப்படியான வருமானம் ஈட்டும் சூழ்நிலை மத்திய அரசுக்கு வேண்டும், இதனால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வாய்ப்புகள் குறைவு என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் மாதத்தின் முதல் நாள் என்பதால் சர்வதேச விலை நிலவரத்தைப் பொருத்து இன்று எரிவாயு நிறுவனங்கள் வர்த்தகச் சிலிண்டர் விலையைச் சுமார் 19 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் BPCL எனப்படும் பார்த் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் ஜி கிருஷ்ணகுமார் கூறுகையில், எரிபொருள் சில்லறை விற்பனை விலைகளின் விலை குறைப்பு பற்றிய செய்திகள் அனைத்து ஊகத்தின் அடிப்படையில் வருகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் நிலைமை நிலையற்றதாக உள்ளது, இதனால் எப்போது எவ்வளவு விலை குறையும் என்பது இப்போது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.