இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து

உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.

பெத்லகேம் நகரில் மாட்டுத் தொழுவத்தில் மரியாள், இயேசுவை பெற்றெடுத்தார் என்று இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மத சான்றோர் குறிப்பிட்டு உள்ளனர். அந்த இடத்தில் கிரேக்க மன்னர் கான்ஸ்டன்டைன் ஏற்பாட்டின் பேரில் கடந்த 333-ம் ஆண்டில் தேவாலயம் கட்டப்பட்டது. சமாரியர் கலகத்தின்போது அந்த தேவாலயம் அழிக்கப்பட்டது. பின்னர் ரோம மன்னர் முதலாம் ஐஸ்டீனியன் 565-ம் ஆண்டில் அதே இடத்தில் புதிய தேவாலயத்தை கட்டினார். பிறப்பிட தேவாலயம் என்றழைக்கப்படும் அந்த வழிபாட்டுத் தலம் இன்றளவும் நிலைத்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் உலகம் முழுவதும் இருந்து பெரும் எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் பிறப்பிட தேவாலயத்தில் கூடுவது வழக்கம். தற்போது இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான போர் காரணமாக இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து பெத்லகேம் நகர மேயர் ஹன்னா ஹனானியா கூறும்போது, ‘பாலஸ்தீனர்கள் மிகுந்த துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்காக பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளோம். நகர நிர்வாகத்தின் முடிவை பிறப்பிட தேவாலய நிர்வாகமும் ஏற்றுக் கொண்டது” என்றார்.

பெத்லகேமில் கடை நடத்தும் ரோனி கூறும்போது, ‘கன்னி மரியாள் சிலை, சிலுவை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது எனது கடையில் கூட்டம் அலைமோதும். இந்த பண்டிகை நாளில் எதுவுமே விற்பனையாகவில்லை” என்று தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *