கட்-அவுட்டில் “குறியீடு..” அதிமுக பொதுக்குழு.. நுழைவாயிலில் இதை நோட் பண்ணீங்களா.. ஆரம்பமே அதிரடி
இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நிலையில், அங்கே உள்ள ஒரு முக்கியமான விஷயம் அனைவரையும் கவனிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. சென்னை வானகரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு செயற்குழு மற்றும் ஒரு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதி. அதன்படியே இன்று அதிமுக கூட்டத்தை நடத்துகிறது.
அதிமுக கூட்டம்: முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக செயற்குழு நடந்தது.. அதைத் தொடர்ந்து இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சுமார் 10.30 மணியளவில் தனியார் மண்டபத்திற்கு வரவுள்ளார்.
இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டம் நடக்கும் இடத்தில் உள்ள ஒரு விஷயம் பலரையும் கவனிக்க வைப்பதாக இருக்கிறது. அதாவது எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அங்கே சாலை முழுக்க கட் அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாகத் தனியார் திருமண மண்டப நுழைவாயிலில் நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. இது இந்த ஆலோசனைக் கூட்டம் எதற்காக என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
குறியீடு: இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தே பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடிக்கு வழங்குவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. மேலும், 40 தொகுதிகளில் வெல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கை, கட்சி சார்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட இருக்கலாம் எனத் தெரிகிறது.
மிக்ஜாம், தென் மாநில மழை குறித்து தீர்மானங்கள், தமிழக அரசைக் கண்டிக்கும் தீர்மானங்கள் என சுமார் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு நடக்கும் கூட்டம் என்பதாலும் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த முறை இந்தக் கூட்டம் நடந்த போது அதிமுகவில் தெளிவற்ற சூழல் இருந்தது. அதிமுக இரண்டு கோஷ்டியாக இருந்தது. பல வழக்குகளுக்கு நடுவே தான் அந்தக் கூட்டமே நடைபெற்றது.
முதல் கூட்டம்: ஆனால், எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்த பிறகு பல கேஸ்களில் எடப்பாடி ஆதரவு தீர்வுகள் வந்தன. இந்தச் சூழலில் தான் எடப்பாடி பொது செயலாளராக ஆன பிறகு முதல் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் சுமார் 3000+ மேல் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இதற்காக அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இன்றைய தினம் முதலில் செயக்குழு கூட்டம் நடக்கும்.. அதன் பிறகு பொதுக்குழு எனத் தெரிகிறது. இந்தக் கூட்டங்களில் முதலில் மற்றவர்கள் பேசுவார்கள். அதன் பிறகு எடப்பாடி இறுதியாகப் பேசுவார் எனத் தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் இந்த பொதுக்குழுக் கூட்டம் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தக் கூட்டத்தின் முகப்பு கூட நாடாளுமன்றத் தேர்தலைக் குறிக்கும் வகையில் இருக்கிறது.