48 மணிநேரம் அவரால் பேசமுடியாது.. தண்ணீரால் ஏற்பட்ட விபரீதம்.. மாயங்க் அகர்வால் – விடயத்தில் நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான மாயங்க் அகர்வால் தற்போது கர்நாடக அணியின் கேப்டனாக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த ரஞ்சி கோப்பை தொடரின் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் திரிபுரா அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் அடுத்த போட்டிக்காக அவர்கள் அகர்தலாவிலிருந்து சூரத் நகருக்கு நேற்று முன்தினம் ஜனவரி 30-ஆம் தேதி விமான மூலம் பயணித்தனர்.
அப்போது திடீரென விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட மாயங்க் அகர்வால் அகர்தலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இப்படி திடீரென மாயங்க் அகர்வாலுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது? என்ற கேள்விகள் பலவது மத்தியிலும் இருந்தது.
ஏற்கனவே இந்த விவகாரம் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்த கர்நாடக கிரிக்கெட் வாரியம் : முழு மருத்துவ அறிக்கையும் வெளியானதற்கு பிறகு சரியான தகவல்களை வழங்குகிறோம் என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள கர்நாடக கிரிக்கெட் வாரியம் மூலம் தெரிவிக்கப்பட்ட தகவலாவது :
நேற்று முன்தினம் விமான நிலையத்தில் அடுத்த போட்டிக்காக புறப்பட தயாரானோம். அப்போது மாயங்க் அகர்வால் தாகம் ஏற்படவே தன்னுடைய சீட்டிற்கு முன்பு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார். பிறகு சில நிமிடங்களிலேயே அவருக்கு தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டது.
அவர் உடனடியாக தண்ணீரை துப்பி இருந்தாலும் எரிச்சல் குறைந்த பாடில்லை. பிறகு விமான பணிப்பெண்ணிடம் இந்த விஷயத்தை கூறவே அவர் உடனடியாக தரையிறக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் குடித்த தண்ணீர் பாட்டிலில் இருந்த ரசாயன திரவமே இதற்கு காரணமாக மாறியுள்ளது. அவரது உதட்டில் வீக்கமும் காயமும் இருப்பதினால் 48 மணி நேரத்திற்கு அவரால் பேச முடியாது. அதன் பின்னரே அவர் முழுஉடற் தகுதியை எட்டுவார் என குறிப்பிட்டுள்ளது.