கும்ப்ளே, சந்திரசேகரை முந்தி.. 2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் படைக்க உள்ள 3 வரலாற்று சாதனைகள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினம் நகரில் துவங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே நிலை பெற்றுள்ளது. மறுபுறம் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்ட இந்தியா தொடரை சமன் செய்ய 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.
முன்னதாக ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முடிந்தளவுக்கு போராடி 6 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். இருப்பினும் வெற்றி கிடைக்காததால் 2வது போட்டியில் இன்னும் சிறப்பாக செயல்பட காத்திருக்கும் அவர் படைக்க உள்ள சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.
சாதனை பட்டியல்:
முதலாவதாக விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 2வது போட்டியில் இன்னும் 2 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பகவத் சந்திரசேகர் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைப்பார். இதற்கு முன் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 23 போட்டிகளில் 95 விக்கெட்டுகள் எடுத்து அந்த சாதனையை படைத்துள்ள நிலையில் அஸ்வின் இதுவரை 20 போட்டிகளில் 94* விக்கெட்டுகளை எடுத்து 2வது இடத்தில் இருக்கிறார்.
அதே போல விசாகப்பட்டினம் போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் இந்தியா – இங்கிலாந்து மோதிய டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் சுழல் பந்து வீச்சாளர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற இரட்டை சாதனையையும் அஸ்வின் படைப்பார். இதற்கு முன் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியா – இங்கிலாந்து மோதிய போட்டிகளில் 100 விக்கெட்களை (139) எடுத்துள்ளார்.
இவை அனைத்தையும் விட இன்னும் 4 விக்கெட்டுகள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகள் எடுக்கும் இந்திய வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையை உடைத்து அஸ்வின் புதிய வரலாறு படைப்பார். இதற்கு முன் கும்ப்ளே 2006ஆம் ஆண்டு 105வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை எடுத்து அந்த சாதனை படைத்தார்.