இதுதான் ‘ஸ்வீட் ஸ்பாட்’.. 4 தூண்களை குறிவைத்த மத்திய பட்ஜெட்.. வரவேற்ற பிரதமர் மோடி! பின்னணி
டெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த நிலையில் அதனை வரவேற்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
‘ஸ்வீட் ஸ்பாட்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ள பிரதமர் மோடி இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்கான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளதாகவும், வளர்ந்த இந்தியாவை எட்டும் பயணத்துக்கான பட்ஜெட்ட இது என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். காலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மொத்தம் 56 நிமிடம் வரை அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு என்பது அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த அறிவிப்பு என்பது அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதையும் அவர் செய்யவில்லை. வருமான வரி உச்சவரம்பில் பழைய நிலையை தொடரும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் ரூ.6.2 லட்சம் கோடி மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.78 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.2.55 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பிற துறைகளுக்கும் நிதி என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் மத்திய இடைக்கால பட்ஜெட் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ” இந்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவீனத்திற்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ.11,11,111 கோடி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வல்லுனர்களை போல் நாம் பேச வேண்டும் என்றால் இது’ஸ்வீட் ஸ்பாட்’ ஆக உள்ளது.