ஓரே அறிவிப்பில் பல துறைக்கு நன்மை.. பட்ஜெட்டில் வெளியான PMAY-R அறிவிப்பு..!
2024-25 நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஓரே அறிவிப்பில் பல துறைகளின் தேவையைப் பூர்த்தி செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்ற திட்டம் பல ஆண்டுகளாக உள்ளது, 1985ல் ராஜீவ் காந்தி இந்திரா ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டது. இந்தத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 2015ல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பெயரில் நகரபுற மக்களுக்காக வழங்கப்பட்டது, 2016ல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ரூரல் (PMAY-R) என்ற பெயரில் இத்திட்டம் கிராமப்புற மக்களுக்காக விரிவாக்கம் செய்யப்பட்டது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வெற்றி அடைந்தது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25 நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் திட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் விரைவில் 3 கோடி பேருக்குச் சொந்த வீட்டு கனவை நினைவாக்கப்பட்ட உள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில் அடுத்த 5 வருடத்தில் கூடுதலாக 2 கோடி மக்களுக்குச் சொந்து வீடு கனவை இந்தத் திட்டத்தின் மூலம் நினைவாக்க உள்ளோம். இதற்காக 2024-25 ஆம் நிதியாண்டுக்குப் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு 80,671 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 79,590 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தியாவில் 2ஆம், 3ஆம் தர நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த நேரத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்ட விரிவாக்கம் பெரிய அளவில் உதவும். குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் சொந்த வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ இந்தத் திட்டம் பயன்படும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் வெறும் சொந்த வீட்டு கனவை மட்டுமே நினைவாக்கப்படுவது இல்லை, இதைத் தாண்டி இந்தியாவில் இருக்கும் வங்கிகள் பாதுகாப்பான கடன்களை அளிக்கும் ஒரு முக்கிய வழித்தடமாக உள்ளது. வங்கிகள் எந்தொரு கடனை காட்டிலும் மிகவும் பாதுகாப்பான கடனாகப் பார்ப்பது வீட்டுக் கடன் தான், இந்திய ரியல் எஸ்டேட் எப்படியிருந்தாலும் வளர்ச்சி பாதையில் இருக்கும், மக்கள் மத்தியில் வீடுகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும், வீடு என்பது மிகவும் எமோஷனலான விஷயம் என்பதால் மக்கள் கடனை கட்டாயம் செலுத்திடுவார்கள். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் வங்கிகள் பெரும் தொகையைக் கடனாக வழங்கி வர்த்தகம் செய்ய முடியும்.