ஆண்டாள் திருப்பாவை 10 | எப்போதும் இறைவனை நினைப்போம்..!
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!
இப்பிறவியில் பாவைநோன்பு நோற்றால் மறுபிறவியில் நற்பதவி சுகம் கிடைக்கும் என்பதும், முற்பிறவியில் செய்த நற்செயல்களால், இப்பிறவியில் நல்வாழ்வு கிடைத்துள்ளது என்பதும் ஆன்றோர் வாக்கு. இதன் மூலம் கர்மவினை குறித்து விளக்கப் படுகிறது. பாவை நோன்பு இருந்து ஸ்ரீமன் நாராயணனையே பற்றாகக்கொண்டு, பிற செயல்களை விடுத்து பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கும் பெண்ணே! நாங்கள் பலமுறை அழைத்தும் கதவைத் திறக்க மறுக்கிறாய். உன்னால் பதில் மொழி பேசக்கூட முடியாதா? புண்ணிய மூர்த்தியான ராமபிரானால் வீழ்த்தப்பட்டவன் கும்பகர்ணன். உறங்கும் போட்டியில் அவன் உன்னிடம் தோற்று. அவனுடைய பேருறக்கத்தை உனக்கு கொடுத்துவிட்டானா?
அருங்கலமே! பெறுவதற்கு அரிய ஆபரணம் போன்றவளே! நமது நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை நல்க திருத்துழாய் மாலை அணிந்த பரந்தாமன் காத்துக் கொண்டிருக்கிறான். அதனால் உறக்கம் தெளிந்து விரைந்து வந்து, கதவைத் திறக்க வேண்டும். உலகத்தில் உள்ளவர்கள் புகழும்படி நோன்பு இருந்து அவனருள் பெறுவோம் என்று தன் தோழியை மார்கழி நீராட அழைக்கிறாள் சூடிக் கொடுத்த சுடக்கொடி.
துயரம் வரும்போது இறைவனை நாடுகிறோம். உன்னையன்றி வேறு யாரையும் நினையோம் என்கிறோம். ஆனால் துயர் நீங்கியதும் அவனை மறந்து உலக இன்பம் என்ற புதைகுழியில் விழுகிறோம். முன்னர் சொன்ன சொல்லை இப்போது காப்பதில்லை என்று தோழியை கடிந்து கொண்ட ஆண்டாள், எப்போதும் இறைவனை நினைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.