குட் நியூஸ்..! இன்னும் 6 மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்படும்..!
மாநில அரசும், ரயில்வே நிர்வாகவும் இணைந்து கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், வில்லிவாக்கத்தில் புதிய ரயில்வே முனையம் அமைக்கப்படும் என்றும் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கூடுதல் பணிகள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்(CMDA) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:
பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பின்வரும் திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் (Sky Walk) – 31.01.2024 அன்று டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் (CMRL) மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளம்பாக்கத்தில் ஒரு புதிய மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய பிரதான கட்டிடத்திற்கும் சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து (MTC) நிலையத்திற்கும் பயணிகள் வசதிக்காக இடையே சாய்வு தளம் மற்றும் படிகட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் பிப்ரவரி 2024-க்குள் முடிவடையும்.
வண்டலூர் மற்றும் அயனஞ்சேரி சந்திப்பு மேம்படுத்தும் பணிக்கு டிபிஆர் தயாரிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 3 சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பேருந்து முனையத்தில் புதிய காவல் நிலையம் – 05.02.2024 அன்று அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இம்முனையத்தின் முன் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் புதிய மழைநீர் வடிகால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து முனையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அணுகல் தன்மை தணிக்கை (Accessibility Audit) குழு அளித்த அறிக்கையின்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.27.98 கோடி மதிப்பீட்டில் 120 ஆம்னி பேருந்துகள் (Idle Parking for Omni Buses) நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் 300 பணியாளர்களுக்கான தங்குமிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி மார்ச் 2024-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை மக்கள் முழுமையாக மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டிள்ளது.