மத்திய இடைக்கால பட்ஜெட் : அரசியல் தலைவர்கள் கருத்து..!

க்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.

அவர் 57 நிமிடங்கள் பட்ஜெட் உரையை முடித்தார்.

இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான துறைகள், கல்வி, சுகாதாரம், பெண்கள் – குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம், பிரதமர் கிராம சாலை திட்டம் உள்ளிட்ட அனைத்துக்குமான கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவாக செலவழித்துவிட்டு அதன் காரணமாகவே நிதி பற்றாக்குறை குறைந்திருப்பதை பெரும் சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

இதைப் போல அனைத்து மக்களுக்குமான மானியங்களாக வழங்கும் உர மானியம், உணவு மானியம், எரிபொருள் மானியங்களையும் வெட்டிச் சுருக்கியிருக்கிறார்கள். வேலையின்மை கடந்த அக்டோபர், டிசம்பர் மாதத்தில் 20-24 வயதுக்கு உட்பட்டவருக்கு 44.5 சதவிகிதமாகவும், 25-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு 14.33 சதவிகிதமாகவும் இருக்கும் நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த திட்டமும் அறிவிப்பில் இல்லை. எந்த கணக்கீடும், தரவுகளுமின்றி 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டுவிட்டதாக பொய்யுரைத்திருக்கிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் மட்டும் மூன்றில் ஒருவர் கிராமப்புறத்தில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ. 26-ல் வாழ்க்கையை நடத்துவதற்கும், நகர்புறத்தில் ரூ. 32-ல் வாழ்க்கை நடத்துவதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில் இது எத்தனை மோசடி என்பது விளங்கும். இந்த நிலையிலும் வறுமை ஒழிப்புக்கு உருப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் இருப்பதை மறைப்பதற்காகவே 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டு விட்டதாக அறிவித்துக் கொள்கிறார்கள்.

இந்தியா வரலாறு காணாத வளர்ச்சியடைந்து விட்டது போல வெற்று முழக்கங்களையும், வாய்ச்சவாடல்களையும் தவிர இடைக்கால பட்ஜெட்டில் எதுவும் இல்லை. கடந்த காலத்தைப் போலவே இது ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், விவசாயத்துக்கும், பெண்களுக்கும் எதிரான பட்ஜெட்டாகும். புதிதாக எந்த முன்வைப்புகளும், திட்டங்களும் இல்லாத நிலையில் கடந்த காலத்தைப் போலவே பெருமுதலாளிகளுக்கும், அந்நிய மூலதனங்களுக்கும் அள்ளிக் கொடுக்கும் கொள்கை தொடரும் என்பதே இதன் பொருள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *