நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பாதாள அறையில் நடந்த பூஜை *ஞானவாபி வளாகம்
வாரணாசி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி வளாகத்தில் உள்ள பாதாள அறையில், ஹிந்து தரப்பினர் வழிபாடு நடத்தினர்.
வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி, ஞானவாபி வளாகம் அமைந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி, சமீபத்தில், இந்த வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர், பிரமாண்ட கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.இதை தொடர்ந்து, ஞானவாபி வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கிடையே, இந்த வளாகத்தில், 30 ஆண்டு களுக்கு மேல் பூட்டிக் கிடக்கும் பாதாள அறையில் பூஜை நடத்தக் கோரி, ஹிந்து தரப்பினர் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம், பாதாள அறையில் ஹிந்துக்கள் வழிபட அனுமதி அளித்ததுடன், இதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்து தரும்படி, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வளாகத்தில் உள்ள பாதாள அறையில், நேற்று முன்தினம் இரவு ஹிந்து தரப்பினர் வழிபாடு நடத்தினர். இது குறித்து, காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை தலைவர் நாகேந்திர பாண்டே கூறுகையில், ”நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டியது அவசியம். அதன்படி, அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் விரைவாக செய்து கொடுத்தது.”இதன்படி, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணி அளவில், பாதாள அறையில் பூஜை நடத்தப்பட்டது.