டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் பாக்டீரியாவை கொல்லும் தக்காளி ஜூஸ் – ஆய்வில் தகவல்..!
எளிதாகவும் அதே சமயத்தில் விலை குறைவாகவும் கிடைக்கக் கூடிய காய்கறிகளில் ஒன்று தக்காளி. இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இந்நிலையில் தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து சமீபத்தில் விஞ்ஞானிகள் சிலர் ஆய்வு செய்துள்ளனர்.
இதில் நம் செரிமானத்தையும், சிறுநீர் பாதையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் சால்மோனெல்லா டைபி (Salmonella Typhi) மற்றும் பிற தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களை தடுக்கும் வல்லமை தக்காளி ஜூஸிற்கு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால்தான் மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் பழங்களையும், காய்கறிகளையும் டயட்டில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுமாறு கூறுகிறார்கள்.
டைபாய்டு காய்ச்சல் வருவதற்கு காரணமாக இருக்கும் கொடூரமான மனித ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த சால்மோனெல்லா டைபி பாக்டீரியாவை தக்காளி ஜூஸ் கொன்றுவிடுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் வெளியான Microbiology Spectrum என்ற ஆய்விதழில் இந்த ஆய்வு குறித்த முழு கட்டுரையும் வெளியாகியுள்ளது.
சால்மோனெல்லா டைபி போன்ற ஒட்டுண்ணிகளுக்கு எதிராக தக்காளி மற்றும் தக்காளி ஜூஸில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதும் தக்காளி ஜூஸின் விசேஷ தன்மைகளை அடையாளம் கண்டுகொள்வதுமே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் எனக் கூறுகிறார் இந்த ஆய்வின் தலைவர் டாக்டர்.ஜியோமின் சாங். இவர் அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைகழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் நோய் எதிர்ப்புத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆரம்பகட்ட பரிசோதனைகள் தக்காளி ஜூஸில் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் தக்காளியின் மரபணுவில் நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்டைடுகள் இருக்கிறதா என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிய உள்ளனர். சிறு புரதங்களான இந்த பெப்டைடுகள் பாக்டீரியாவின் சவ்வுகளை பாதிக்கக் கூடியது. ஒட்டுண்ணிகளை சுற்றி பாதுகாப்பு அடுக்குகளாக இருக்கும் இவைதான் ஒட்டுண்ணி ஒருங்கிணைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நான்கு முக்கியமான நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்டைடுகளில், இரண்டு பெப்டைடுகள் சால்மோனெல்லா டைபிக்கு எதிராக சிறப்பாக வேலை செய்கின்றன.
மேலும் நம் செரிமானம் மற்றும் சிறுநீர் பாதை ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு ஒட்டுண்ணிகளுக்கு எதிராக தக்காளி ஜூஸ் எப்படி வேலை செய்கிறது என்பதையும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்களிடம், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இள வயதினர்களிடம் தக்காளியின் பயன் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமுள்ள தக்காளி மற்றும் பிற காய்கறிகளையும் பழங்களையும் மக்கள் அதிகம் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இனிமேலாவது தக்காளியை ஒதுக்காமல் இதன் பயனை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.