ஒரு வழியாக ஃபார்முக்கு வந்த குட்டி டி வில்லியர்ஸ்.. வாண வேடிக்கைனா இதுதான்.. பார்க்காமலேயே சிக்ஸ்!

பிரிட்டோரிய கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை கேப்டவுன் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.

கடந்த யு19 உலகக்கோப்பை தொடரின் போது தென்னாப்பிரிக்கா அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டார் வீரராக பார்க்கப்பட்டவர் டிவால்ட் பிரெவிஸ். அப்படியே டி வில்லியர்ஸின் ஜெராக்ஸை போல் ஷாட்களை ஆடி வந்த பிரெவிஸ்-க்கு ரசிகர்களும் அதிகமாகினர். இதன் காரணமாக பிரெவிஸ்-க்கு சர்வதேச அளவில் நடக்கும் லீக் போட்டிகளில் மவுசு எகிறியது. ஐபிஎல் தொடரில் கூட மும்பை அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் டிவால்ட் பிரெவிஸ் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. வெளிநாடு பிட்ச்களில் சொதப்புகிறார் என்றால், உள்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரிலும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பொறுத்து பார்த்த தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்கள் பலரும், டி வில்லியர்ஸை போல் விளையாட வேண்டும் என்று முயற்சிக்காமல் உங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் எஸ்ஏ20 லீக் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியை எதிர்த்து மும்பை கேப்டவுன் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டவுன் அணி கேப்டன் பொல்லார்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய வான் டர் டூசன் 21 ரன்களிலும், லிவிங்ஸ்டன் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் 4வது பேட்ஸ்மேனாக பிரெவிஸ் களமிறக்கப்பட்டார்.

தொடக்கத்திலேயே சிக்சர் விளாசி ஆட்டத்தை தொடங்கிய பிரெவிஸ், அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி என்று பொளந்து கட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பிரெவிஸ், 19வது ஓவரின் முதல் 2 பந்துகளில் அடித்த சிக்சர் ரசிகர்களை மிரள வைத்தது. ஒரு பந்தை பார்க்காமலேயே சிக்சர் அடித்த பிரெவிஸ், மற்றொரு பந்தை மைதானத்திற்கு வெளியில் அனுப்பினார். இதன் மூலமாக 27 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த, கடைசி ஓவரிலும் ஒரு சிக்சரை விளாசி கட்டினார்.

இறுதியாக 32 பந்துகளில் 6 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 66 ரன்களை சேர்த்தார். இவரின் அதிரடியால் மும்பை கேப்டவுன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்து தோல்வியடைந்தது. 42 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஒருபக்கம் நின்று வெரைன் ஆடிய அதிரடி ஆட்டம் பலரையும் வியக்க வைத்தது. சிறப்பாக ஆடிய வெரைன் 52 பந்துகளில் 116 ரன்களை விளாசி தள்ளினார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *