IND vs ENG : டாஸ் வென்ற இந்திய அணி.. சிராஜை நீக்கிய ரோகித் சர்மா.. 3 மாற்றங்களை செய்த ஹிட்மேன்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நிதிய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து போட்டிக்கு முன்பு நடந்த பயிற்சியின் போது இந்திய ஜாம்பவான் ஜாகீர் கான் அறிமுக வீரர் ரஜத் பட்டிதர்-க்கு டெஸ்ட் கேப் வழங்கினார். இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், விசாகப்பட்டினம் பிட்ச் சிறந்ததாக உள்ளது. பிட்சில் என்ன நடக்கும் என்பது தெரியும். அதனால் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.

ஐதராபாத் மைதானத்தில் அடைந்த தோல்வியை கடந்து வர வேண்டும். இந்த போட்டியில் என்ன செய்ய வேண்டும், திட்டங்களை செயல்படுத்துவது என்பது குறித்து பேசியிருக்கிறோம். கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்தோம். அதையே மீண்டும் செய்ய விரும்புகிறோம். 2வது இன்னிங்ஸில் தான் போப்பின் அபார பேட்டிங்கால் சொதப்பினோம்.

அதேபோல் கிரிக்கெட்டில் காயமும் ஒரு பகுதி தான். அதற்கு தயாராக தான் மாற்று வீரர்களை வைத்துள்ளோம். ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ரஜத் பட்டிதர் களமிறங்கவுள்ளனர். சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டு, முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், நாங்களும் பேட்டிங் செய்யவே விரும்புகிறோம். கடந்த வாரம் எங்களுக்கு மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது. அதே நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களமிறங்குகிறோம். இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜாக் லீச் மற்றும் மார்க் அவுட் ஆகியோருக்கு பதிலாக சோயப் பஷீர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *