அமலாக்கத்துறை 5வது முறை சம்மன்.. இன்று ஆஜராவரா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்?
டெல்லியில் மதுபான விற்பனையை தனியாருக்கு வழங்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அரசாங்கம் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதற்காக பெரிய நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் கோடிக்கணக்கில் கைமாறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கினை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த சூழலில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 ஆவது முறையாக அண்மையில் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழலில் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பஞ்சாப்பில் இருந்தும் ஆம் ஆத்மி தொண்டர்கள் ஏராளமானோர் டெல்லியில் குவிந்து வருவதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வந்தாலும், காவல்துறை என்பது மத்தியி அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை விசாரணை வளையத்தில் வைக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த சதி நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு காலத்தில் காங்கிரஸ், பாஜக என மாறி மாறி பலம் வாய்ந்த இடமாக கருதப்பட்ட டெல்லி கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சி டெல்லியின் அரசியல் களத்தையை மாற்றி அமைத்தது.
ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட போதிலும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எப்போதும் மோதல் போக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.