நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை.. காரணம் என்ன?
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.
ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் ரஞ்சித் என்பவரின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.
தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல் திருச்சியில் ஒரு இடத்திலும், சிவகங்கையில் ஒரு இடத்திலும், தென்காசியில் ஒரு இடத்திலும், சென்னையில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக யூடியூபில் பிரபலமான நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனின் திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள இல்லத்தில் காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ராயகிரி , நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன்(39) வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2019 ஆண்டு தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பகைவரை வென்றான் கிராமத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தென்னக விஷ்ணு என்ற யூடியூபர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இது தவிர்த்து சென்னையிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.