சவுத் இந்தியன் அமீர்கான்… ஆர்.ஜே.பாலாஜிக்கு புதிய பட்டம்
ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், சின்னி ஜெயந்த், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள சிங்கப்பூர் சலலூன் திரைப்படம் கடந்த 25 ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோகுல் இதனை இயக்கியிருந்தார். இதன் சக்சஸ் மீட் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆர்.ஜே.பாலாஜி,, சின்னி ஜெயந்த், இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கலை இயக்குநர் ஜெய், சுமார் மூன்று ஏக்கரில் படத்தில் வரும் சலூன் அதையொட்டிய வீடுகள் கொண்ட பிரமாண்ட அரங்கை அமைத்ததாக குறிப்பிட்டார். தனக்கு எல்லாவகையிலும் சுதந்திரம் கொடுத்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
இமான் அண்ணாச்சி சிங்கப்பூர் சலூனில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். அவர் பேசுகையில், படத்தை கள்ளக்குறிச்சியில் பார்த்ததாகவும், திரையரங்குகள் நிரம்பி வழிந்ததாகவும், ரசிகர்கள் தனது கதாபாத்திரத்தையும் விரும்பி ரசித்ததாகவும் கூறினார்.
நடிகர் சின்னி ஜெயந்த் பேசுகையில், விழுப்புரத்தில் படத்தைப் பார்க்கையில், ரசிகர்கள் கொண்டாட்டமாக படத்தை ரசித்தார்கள். ஆர்.ஜே.பாலாஜியின் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கும். அதனால், அவருக்கு, சவுத் இந்தியன் அமீர்கான் என்ற பட்டத்தை தருகிறேன் என்றார்.
சிங்கப்பூர் சலூன் படத்தைப் பாராட்டி சிகை அலங்கார கலைஞர்கள் ஒரு விழா நடத்தியதாகவும், அதில் பேசிய ஒருவர், எங்கள் கத்தி பேசாததை உங்களின் கதை பேசியிருக்கிறது என்றதாகவும் இயக்குநர் கோகுல் தெரிவித்தார். சிகை அலங்கார கலைஞர்களை ஒரு சாதியாக கட்டமைத்துவிட்டோம். நான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன். இது குலத்தொழில் கிடையாது. அதனால்தான், படத்தின் ஆரம்பத்தில் ஒரு முஸ்லீம் சிகையலங்காரம் செய்வதாக காட்டினேன் என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில், ஜனவரி 25 வெளியான படங்களில் சிங்கப்பூர் சலூன் படத்துக்கே அதிக வசூல் என்றார். இந்த வருடம் ஆறு படங்கள் தனது தயாரிப்பில் வெளிவரும் என்றவர், கோகுல் இயக்கத்தில் மேலுமொரு படம் தயாரிக்க இருப்பதாக கூறினார்.
சிங்கப்பூர் சலலூன் படம் போட்ட காசை எடுக்கவில்லை, அதற்குள் சக்சஸ் மீட் நடத்துகிறார்கள் என்ற பேச்சு திரையுலகினர், விமர்சகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கு பதிலளிப்பது போல் இருந்தது, ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு. படம் வெளியாகி முதல் வாரத்தில் பார்வையாளர்களுக்குப் பிடித்து, இரண்டாவது வாரத்தில் படத்திற்கு ‘புஷ்’ கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம்.
அப்படி, எங்கள் படமும் பார்வையாளர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று என்றார். அமீர்கான் ஒரு லெஜென்ட், அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது, அந்தப் பட்டமும் எனக்கு வேண்டாம் என்று சின்னி ஜெயந்த் அறிவித்த, சவுத் இந்தியன் அமீர்கான் பட்டத்தை நிராகரித்தார். ஐசரி கணேஷ் சார் எனக்கு அப்பா போன்றவர். எல்கேஜி 2, மூக்குத்தி அம்மன் 2 போன்ற ஐடியாக்கள் உள்ளது. அதையும், ஐசரி கணேஷ் சார் தயாரிப்பில்தான் செய்வேன். சிங்கப்பூர் சலூன் இரண்டாவது வாரத்திலும் சிறப்பாக ஓட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்றார் ஆர்.ஜே.பாலாஜி.