இலங்கை வந்த அமெரிக்க இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த 25 வயதுடைய அமெரிக்க பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் இருந்த 6000 டொலர் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் பெண் நானுஓயா பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுற்றுலா பெண்
கடந்த 29 ஆம் திகதி கண்டியில் உள்ள தங்குமிடமொன்றில் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 30ஆம் திகதி கண்டியில் இருந்து பதுளைக்கு ரயிலில் பயணித்த இந்த பெண் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட சிலர் நானுஓயா பொலிஸாரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
2400 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க வளையல், 3600 அமெரிக்க டொலர் பெறுமதியான சங்கிலி, வைரம் பதித்த இரண்டு காதணிகள் என்பன திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இருவர் கைது
இது தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் சட்ட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்த பெண் சட்ட வைத்தியரிடம் பரிசோதனைக்குட்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், அவர் ஆஜராக மறுத்துவிட்டார்.
கண்டியில் உள்ள விடுதி ஒன்றில் சுற்றுலா வழிகாட்டி மற்றும் மற்றுமொரு நபருடன் மது அருந்தியதாகவும், இடையில் நடந்த எதுவும் தனக்கு ஞாபகம் இல்லை எனவும் பொலிஸாரிடம் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.