ஆனையிறவு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் கடந்த 24(24.01.2024) ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்றையதினம்(01.02.2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
“கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இருந்து இரணைமடுவுக்கு மாடுகளை கொண்டு சென்றுள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதன்போது வீதியால் வந்த அரச பேருந்து குறித்த நபரையும் அவரது 8 மாடுகளையும் மோதிவிட்டு, தவறான பக்கத்துக்கு சென்று, எதிரே வந்த ஹையேஸ் ரக வாகனத்தையும் மோதியது.
இதன்போது 8 மாடுகளும், இளம் குடும்பப்பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
மேலும், அரச பேருந்து சாரதி அளவுக்கு அதிகமான மது போதையில் காணப்பட்டதாக, மரண விசாரணைகளின்போது பொலிஸார் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.