பக்கத்து ஊருக்கு கூட விமானத்தில் போகும் காலம் ரொம்ப தூரத்தில் இல்லை!! பட்ஜெட்டில் அமைச்சர் தெளிவா சொல்லிட்டாரு
பட்ஜெட் 2024 (Budget 2024) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் பிப்ரவரி 1 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்தப்படி, பெரியதாக எந்த அறிவிப்பும் இல்லை.
ஆதலால், இடைகால பட்ஜெட்டாகவே இது பார்க்கப்பட்டது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் இதற்கு காரணமாக இருக்கலாம். பெரிய நிதியை கொண்ட அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாவிடினும், பட்ஜெட்டில் சிறு சிறு திட்டங்கள் நிறைய அடங்கியுள்ளன. ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், வருகிற 2024-25 நிதியாண்டில் விமான போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்களும் மத்திய அரசாங்கத்திடம் உள்ளன. இதன்படி, தற்போதுள்ள விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படும் அதேநேரம், புதிய விமான நிலையங்களையும் நாடு முழுவதும் கொண்டுவரும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இதுகுறித்து மேலும் பேசிய நிதி அமைச்சர், கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் விமான போக்குவரத்து பெரிய அளவில் வளர்ச்சிக் கண்டுள்ளதாக பெரிமிதத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்களில் விமான நிலையங்களின் எண்ணிக்கை (149) இரண்டு மடங்காகி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1 வருடத்தில் இந்திய ஏர்லைன் நிறுவனங்கள் ஆயிரத்திற்கும் அதிகமான புதிய விமானங்களை ஆர்டர் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய நிதியமைச்சர், “UDAN திட்டத்தின் கீழ் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களுக்கு விமான சேவை பரவலாக உள்ளது. புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 517 புதிய விமான வழித்தடங்களில் 1.3 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்க்கும்போது, ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் என்ற 3 உள்நாட்டு ஏர்லைன் நிறுவனங்கள் கடந்த 1 வருடத்தில் மட்டும் மொத்தம் 1,120 விமானங்களை ஆர்டர் செய்துள்ளன.
விமான சேவையில் புதியதாக இறங்கியுள்ள ஆகாசா ஏர் புதியதாக 150 போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளதாக கடந்த ஜனவரி மாதத்தில் அறிவித்தது. ஆக, மீதி 970 விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்த 970 விமானங்கள் போயிங் மற்றும் ஏர்பஸ் விமானம் கட்டும் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகின்றன.
மேலே கூறப்பட்ட 970 விமானங்களில், டாடா குழுமத்தில் ஒரு அங்கமாக வகிக்கும் ஏர் இந்தியா 470 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் 250 விமானங்களை ஏர்பஸ் நிறுவனத்திலும், 220 விமானங்களை போயிங் நிறுவனத்திலும் கடந்த 2023 பிப்ரவரியில் ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்தது. அதன்பின், கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் மிக பெரிய ஏர்லைன் நிறுவனமான இண்டிகோ, ஏர்பஸ் நிறுவனத்தில் இருந்து 500 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.