இ-வாகனங்களை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடரும்.. இந்த முறையும் பெரும் தொகையை ஒதுக்கியிருக்காங்க!
காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு இந்தியாவில் பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெட்ரோல் – டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் பணிகள் நாட்டில் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இதன் அடிப்படையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓர் சூப்பரான திட்டமே ஃபேம் (Faster Adoption and Manufacturing of Electric Vehicle) ஆகும்.
இது ஓர் மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டம் ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஃபேம் திட்டத்தின் வாயிலாக மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி, மின் வாகன உற்பத்தி மற்றும் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனாலேயே கடந்த காலங்களில் மலையளவில் காணப்பட்ட மின்சார வாகனங்களின் விலை தற்போது பெருமளவில் குறைந்துக் காணப்படுகின்றது. இத்தகைய சூப்பரான திட்டத்தையே இந்தியாவில் மத்திய அரசு தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்றைய தின பட்ஜெட் அறிவிப்பில் ஃபேம் திட்டத்திற்காக மத்திய அரசு 2 ஆயிரத்து 671 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியர்கள், குறிப்பாக, மின்சார வாகன விரும்பிகள் பலரின் எதிர்பார்ப்பாக ஃபேம் 2 திட்டத்தின் நீட்டிப்பு பற்றிய அறிவிப்பு இருந்து வந்தது. இந்த நிலையிலேயே பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கியது பற்றிய தகவலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு இருக்கின்றார்.
ஆனால், இந்த திட்டத்தை நீட்டிப்பது அல்லது மூன்றாம் கட்ட ஃபேம் திட்டம் பற்றிய எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. ஃபேம் திட்டம் முதன் முதலில் 2015 ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பிரதமர் மோடி தலைமையிலான அரசே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தைத் தொடர்ந்து ஃபேம் 2 திட்டம் 2019இல் வெளியிடப்பட்டது.
ஃபேம் 1 திட்டத்தின்கீழ் ரூ. 895 கோடியும், ஃபேம் 2 திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபேம் 2 திட்டத்தின் ஆயுட்காலம் 2022 ஆம் ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே கோவிட் வைரஸ் தொற்று முந்தைய ஆண்டுகளில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஃபேம் 2 திட்டம் நீட்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே தற்போது இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கின்றது. இந்த திட்டத்தின் வாயிலாக, அதாவது, கட்டம் இரண்டு ஃபேம் திட்டத்தின்கீழ் 7 ஆயிரம் இ-பஸ்கள், 5 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 55 ஆயிரம் மின்சார நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10 லட்சம் எலெக்ட்ரிக் டூ-வீலர் பயனர்கள் பலனடைந்திருக்கின்றனர்.
வரும் நாட்களில் பலனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசின் மின் வாகன ஊக்குவிப்பு செயல்பாடு இன்னும் சில வருடங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, மின் வாகன உற்பத்தி மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பை தொடர்ந்து ஆதரிக்க இருப்பது பற்றிய அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் அறிவித்து இருக்கின்றது.