எல்லாமே பெரிய பெரிய பணக்காரர்களின் கார்கள்.. ஒன்ன விடல எல்லாத்தையும் தூக்கிட்டாங்க! போட்ட பிளானெல்லாம் போச்சு!
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 40க்கும் மேற்பட்ட அரிய வகை கார்கள் மும்பை நகர காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு கார் மாடலின் விலையும் பல கோடி ரூபாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. காவல்துறையின் அதிரடி நடிவடிக்கை பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடியது. இந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அரசு மட்டுமின்றி சில தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் குடியரசு தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடின. அந்தவகையிலேயே மும்பையைச் சேர்ந்த ஓர் தனியார் அமைப்பு, சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களைக் கொண்டு பேரணியை மும்பையில் நடத்தியது.
இந்த பேரணியில் 40க்கும் அதிகமான சூப்பர் மற்றும் அரிய வகை கார்கள் பங்கேற்றன. இந்த கார்களையே மும்பை நகர காவல்துறையினர் தற்போது பறிமுதல் செய்திருக்கின்றனர். காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் ஒவ்வொரு கார் மாடலும் பல கோடி ரூபாய் மதிப்புக் கொண்டவை ஆகும்.
மேலும், பெரும் பெரும் செல்வந்தர்களுக்கு சொந்தமான கார்கள் ஆகும். இத்தகைய கார்களையே காவல்துறையினர் சிறிதும் தயக்கமின்றி சிறைபிடித்திருக்கின்றனர். காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம், வாகன பேரணிக்கு அனுமதி வாங்கவில்லை என்பதே ஆகும். மும்பையில் ஜனவரி 23 தொடங்கி பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வரை இதுமாதிரியான நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை மீறியே சூப்பர் கார்கள் உரிமையாளர்கள் மும்பையில் வாகன பேரணியை நடத்தி முயன்றனர். இதனாலேயே அனைத்து வாகனங்களின்மீதும் மும்பை காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுக்க தொடங்கி இருக்கின்றது. நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே வாகனங்கள் ஒன்று திரண்டிருந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர், அப்படியே வாகனங்களை சிறைப்பிடித்திருக்கின்றனர்.
அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்திருக்கின்றது. வாகன பேரணியானது மும்பையின் ஜியோ வேர்ல்டு டிரைவ் மால் தொடங்கி சமீபத்தில் திறக்கப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் வாயிலாக மீண்டும் தொடக்க புள்ளியான ஜீயோ வேர்ல்டு டிரைவ் மாலில் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால், வாகனங்கள் பேரணியைத் தொடங்கும் முன்னரே காவல்துறையினர் அவர்களின் நடவடிக்கையை எடுத்துவிட்டனர். சுமார் 41 ஆடம்பர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதுதவிர 43 பேர் மீது மும்பை நகர காவல்துறையினர் வழக்கு பதிந்து இருக்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் இதில் அடங்குவார்.
போர்ஷே (Porsche), லம்போர்கினி (Lamborghini), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), ஃபெர்ராரி (Ferrari) மற்றும் ஆடி (Audi) என முன்னணி பிராண்டுகளின் முன்னணி சூப்பர் கார் மாடல்களே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் கார்கள் அனைத்தும் பல கோடி ரூபாய் விலைக் கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒரு சில அரிய வகை கார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதனால்தான் இந்த நிகழ்வு கார் காதலர்களின் கண்களில் ரத்த கண்ணீரை வர செய்திருக்கின்றது. மேலும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் பெரும்பாலான கார்கள் பந்த்ரா, கர் மற்றும் அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர்களுடையது என காவல்துறை தகவல் தெரிவித்திருக்கின்றது. காவல்துறையின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்த சூப்பர் கார்களின் உரிமையாளர்கள், காவல்துறையினர் மீது புகார் தெரிவிக்க தொடங்கி இருக்கின்றனர்.
தங்களுக்கு காவல்துறை இதுபோன்ற ஓர் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதே தெரியாது என்றும், அவர்கள் வெளிப்படையாக உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். ஆகையால், ஒரு சில சூப்பர் கார் உரிமையாளர்கள் காவல்துறையினரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும், சூப்பர் கார்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மேல்கட்ட நடவடிக்கையை எடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
அனைத்து வாகனங்களின் ஆவணங்களையும் அவர்கள் சோதனைச் செய்ய தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக, பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் வாகனங்களுக்கு பின்னால் ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா? மேலும், மாடிஃபிகேஷன் ஏதேனும் செய்யப்பட்டு உள்ளதா என்றும் அவர்கள் ஆராய தொடங்கி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, நீதிமன்றங்களின் வழிக்காட்டுதலின்படி அந்தந்த வாகனங்களின் விதிமீறலுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்திருக்கின்றது.