தமிழ்நாடு அரசு பக்காவா பிளான் போட்டு பண்ணுது!! கிளாம்பாக்கம் போறது இனி ஈஸி… ஆறே 6 மாசம் வெயிட் பண்ணுங்க!
பயணிகளுக்கு அசவுகரியத்தை குறைக்கும் விதமாக கிளாம்பாக்கத்தில் புதியதாக இரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக ஓர் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவலை வெளியிட்டது யார்? கிளாம்பாக்கத்தில் இரயில் நிலையம் வந்தால், அது எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
சென்னை, கோயம்பேடை சுற்றிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, புதிய பேருந்து முனையம் மாநகருக்கு வெளியே கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளதை பற்றி நிச்சயம் நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏனெனில், தற்சமயம் இதை பற்றிய விவாதங்கள் தான் இணையத்திலும், பொது வெளியிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்கிற பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த பேருந்து முனையம் சென்னையின் மையத்தில் இருந்து அதிக தொலைவில் உள்ளதாகவும், இதனால் வெளியூர்களுக்கு விரைவு பேருந்தில் செல்ல நீண்ட நேரத்திற்கு பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு வர வேண்டியதாக உள்ளதாகவும் பயணிகள் நிறைய பேர் தங்களது ஆதங்கத்தை புகார்களாக தெரிவித்து வருவதை சமூக வலைத்தள பக்கங்களிலும், செய்திகளிலும் பார்த்திருப்பீர்கள்.
அத்துடன், தனியார் ஆம்னி உரிமையாளர்களும் தங்களது தொழில் இதன் காரணமாக பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், சமீபத்தில் உயர்நீதிமன்றம், “இது எதிர்காலத்திற்கான திட்டம்” என மாநில அரசை பாராட்டியுள்ளதால், இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு பின்வாங்க போவது இல்லை. இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் இன்னும் 6 மாதங்களில் இரயில் நிலையம் திறக்கப்பட உள்ளதாக ஓர் சந்தோஷமான செய்தி வெளிவந்து உள்ளது.
மாநிலத்தின் மிக முக்கியமான பேருந்து முனையம் என்பதால், கிளாம்பாக்கத்தில் விரைவில் மின்சார இரயில் நிலையம் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்கள் கொண்டுவரப்படலாம் என கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே பேச்சுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் தற்போது, தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்னும் 6 மாதங்களில் கிளாம்பாக்கம் இரயில் நிலையம் அமைக்கப்படும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மாநில அரசும், மத்திய அரசின் இரயில்வே நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்த பணிகள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக கூறப்பட்டு இருப்பதாவது, “பொது மக்களின் வசதியை மேம்படுத்தவும், அசவுகரியத்தை குறைக்கவும் பின்வரும் திட்டங்கள் வகுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. கிளாம்பாக்கத்தில் புதிய இரயில் நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி இரயில்வே துறைக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் கிளாம்பாக்கம் இரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலத்தை அமைப்பதற்கான டெண்டர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் (CMRL) 3ஆம் கட்ட பணிகளின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் ஒரு புதிய மெட்ரோ இரயில் நிலையம் அமையவுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய பிரதான கட்டிடத்திற்கும், சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்திற்கும் இடையே பயணிகளின் வசதிக்காக சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இந்த 2024 பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் முடிச்சூரில் ரூ.27.98 கோடி முதலீட்டில், 5 ஏக்கர் நிலப்பரப்பில் 120 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு இடவசதி ஏற்படுத்த கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.