மஹிந்திராவில் எல்லாரும் தேடி, தேடி வாங்கும் கார்!! ஃபேக்ட்ரியில் உற்பத்தி நிக்காமல் ஓடுது!
மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) கார்கள் உற்பத்தி வெற்றிக்கரமாக 1 லட்ச யூனிட்களை கடந்துள்ளது. வெறும் 2 வருடங்களுக்கு உள்ளாக இந்த சாதனையை ஸ்கார்பியோ என் எட்டியுள்ளது.
சமீப காலமாக எஸ்யூவி கார்களில் மஹிந்திரா நிறுவனம் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறது. இதன் வெளிப்பாடாக வெளிவந்ததே, ஸ்கார்பியோ என் ஆகும். இந்திய மார்க்கெட்டில் பல வருடங்களாக விற்பனையில் இருக்கும் பிரபலமான ஸ்கார்பியோ காரின் புது ஜென்ரேஷன் மாடலாக ஸ்கார்பியோ என் கொண்டுவரப்பட்டது.
ஸ்கார்பியோ காருக்கே உண்டான பெட்டகம் வடிவிலான உடலமைப்பை பெற்றிருந்தாலும், முந்தைய ஸ்கார்பியோ கார்களுடன் ஒப்பிடுகையில் புதிய ஸ்கார்பியோ என் தோற்றத்திலும் தொழிற்நுட்ப அம்சங்களிலும் புதுமையானதாக இருந்தது. இதன் காரணமாகவே, ஸ்கார்பியோ என் காரை அதிக பேர் வாங்க ஆரம்பித்தனர். இதனால், ஸ்கார்பியோ என் கார்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மஹிந்திரா நிறுவனம் உள்ளது.
இந்த நிலையில், ஸ்கார்பியோ என் கார்களின் உற்பத்தி எண்ணிக்கை வெற்றிக்கரமான 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. மார்க்கெட்டில் ஸ்கார்பியோ என் கார் 2022ஆம் ஆண்டின் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகையில் பார்த்தால், வெறும் 1.5 வருடங்களில் 1 லட்சம் ஸ்கார்பியோ என் கார்களை மஹிந்திரா உற்பத்தி செய்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஸ்கார்பியோ என் மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் என்பன அந்த 5 வேரியண்ட்கள் ஆகும். 7 விதமான பெயிண்ட் ஆப்ஷன்கள் இந்த காருக்கு வழங்கப்படுகின்றன. அதாவது, 7 விதமான நிறங்களுள் ஒன்றில் ஸ்கார்பியோ என் காரை வாங்கலாம்.
மஹிந்திராவின் இந்த 3-வரிசை எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.60 லட்சத்தில் இருந்து ரூ.24.54 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன. ஸ்கார்பியோ-என் காரில் வழங்கப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 198 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
ஸ்கார்பியோ என் காரின் மற்றொரு என்ஜின் ஆப்ஷனான 2.2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 173 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன், கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.
அத்துடன், ஸ்கார்பியோ என் காரை 4 எக்ஸ்ப்ளோர் சிஸ்டத்துடனும் வாங்கலாம். மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில்தான் ஸ்கார்பியோ என் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.39,300 வரையில் அதிகரித்து இருந்தது. ஆனால், காரின் டாப் இசட்8எல் வேரியண்ட்டின் விலைகள் மட்டுமே ரூ.39,300 அதிகரிக்கப்பட்டன. மற்றவைகளின் விலைகள் வெறும் ரூ.600 மட்டுமே அதிகரிக்கப்பட்டன.