டெல்லி தேர்தல் ஆணையத்தில் புஸ்ஸி ஆனந்த்.. உதயமாகிறது நடிகர் விஜயின் கட்சி? அடுத்த மூவ் என்ன?
ஒரு காலத்தில் இவர் படத்தை எல்லாம் யார் காசு கொடுத்து பார்ப்பார்கள் என்று விமர்சிக்கப்பட்டவர் நடிகர் விஜய். இன்று தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும் ரூட் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. மிகவும் பழக்கப்பட்ட ரூட்டில் ரஜினிகாந்த் பயணிக்க முயற்சித்தபோது உடல்நிலையை காரணம் காட்டி அவர் கடைசி நேரத்தில் பின்வாங்கினார்.
பல ஆண்டுகளாக மக்களின் அரசியலை சினிமாவில் பேசிய கமல்ஹாசனும் , கட்சியை ஆரம்பித்து தேர்தல் களத்திலும் இறங்கியுள்ளார். இந்த நிலையில் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அண்மையில் அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் நியமித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அண்ணன் ரெடி போஸ்டர் அடி என்ற பாடலும் அவருக்கு கச்சிதமாக அமைந்தது. இந்த நிலையில் அண்மையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகளை கலந்து ஆலோசித்த விஜய் கட்சியின் பெயரை அறிவித்துவிட இருப்பதாக கூறப்படுகிறது.
எந்த நேரத்திலும் கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் கட்சிப்பணிக்காக இரண்டாம் கட்ட தலைவர்களை விஜய் தேடி வருகிறார் என்று கூறப்படுகிறது. அரசியல் சார்பின்றி சமூகம் மீது அக்கறை கொண்ட தலைவர்களை தங்கள் கட்சியில் சேர்க்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
மகளிர், சுற்றுச்சூழல், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக போராடுவோரை தங்கள் கட்சியில் சேர்க்க விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்சி மற்றும் கொடியினை அறிவித்ததும் , பிரமாண்டமான மாநாடு நடத்தவும் விஜய் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் டெல்லி தேர்தல் ஆணையம் சென்றுள்ளார். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கான ஆவணங்கள் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் வடக்கு மண்டலம் அல்லது மேற்கு மண்டலங்களில் முதல் பொதுக்கூட்டம் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டம், ஒன்றியம், சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் மாவட்ட செயலாளர்களை முதல் மாநாட்டு மேடையிலேயே அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் விஜயின் கட்சி போட்டியிடாது என்று கூறப்படுகிறது. ஆனால் 2026 தேர்தல் களத்தில் கண்டிப்பாக விஜயின் கட்சி போட்டியிடும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.