ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றார் சம்பாய் சோரன்..
ஜார்க்கண்டின் அடுத்த முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் துணைத் தலைவர் சம்பாய் சோரன் பதவியேற்றுக்கொண்டார். நில மோசடி மற்றும் நிலக்கரி சுரங்கம் ஒதுக்குவதில் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கில் இருந்து விடுபட ஹேமந்த் சோரன் தரப்பு நீதிமன்றத்தை நாடிய போதும், அவர்களுக்கு பின்னடைவே மிஞ்சியது. இந்த நிலையில் ஒரு வேளை கைது செய்யப்பட்டால் தனக்கு பிறகு சம்பாய் சோரன் ஆட்சியை கவனிப்பார் என்று ஏற்கனவே ஹேமந்த் அறிவித்திருந்தார்.
அதன்படி ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சம்பாய் சோரன் முதலமைச்சராகவும், ஆலம்கீர் ஆலம் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றுக் கொண்ட நிலையில் அவர் வரும் 5ஆம் தேதி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் சம்பாய் சோரனுக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட்டில் அந்த மாநிலத்தின் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் 81 இடங்கள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களை ராஞ்சியில் இருந்து ஹைதராபாத் அழைத்துச்சென்று தங்க வைக்கவும் திட்டமிட்டுள்ளது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி.