Sensex Nifty Today: தாறுமாறாக எகிறி குதித்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த இந்திய பங்குச் சந்தை!!
இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று 1,200 புள்ளிகள் உயர்ந்து 73,000 புள்ளிகள் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. 50 பங்குகளைக் கொண்ட நிப்டி எனப்படும் தேசிய பங்குச் சந்தை ரிலையன்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் மதிப்பை இன்று உயர்த்தியுள்ளது. நிப்டி மட்டும் இன்று 22,126.80 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. மேலும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
நிப்டி இன்று மதியம் 12.05 மணிவாக்கில் 1.7% உயர்ந்து அதாவது 22,086 புள்ளிகளைத் தொட்டது. சென்செக்ஸ் 1.77% புள்ளிகள் உயர்ந்து, அதாவது 72,909 புள்ளிகளைத் தொட்டு வரலாற்று சாதனை பெற்று இருந்தது.
மத்திய நிதியமைச்சர் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து இருந்த நிலையில், பெரிய அளவில் பங்குச் சந்தை ஏற்றம் காணப்படவில்லை. இதற்குக் காரணம் பட்ஜெட்டில் பெரிய அளவில் எந்த அறிவிப்பு இல்லாததுதான். மேலும், அமெரிக்க அரசு வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் இருந்தது.
பட்ஜெட் தாக்கலின்போது பேசி இருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”தங்களது அரசு பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று உறுதி அளித்து இருந்தார். இது தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் பெரிய அளவில் எந்தவித நலத்திட்டங்களோ, மானிய அறிவிப்புகளோ, இலவசங்களோ அறிவிக்கப்படவில்லை.